வீழ்வேன் என்று நினைத்தாயோ !!!!!—– மௌனத்தின் ஓசை

வீழ்வேன் என்று நினைத்தாயோ !!!!!!!

பூ மாலை ஓர் தோளில் தான்
போட நினைத்தாள் பெண்
போட்டாலும் பூமாலைக்கோர்
பொருளும் இல்லையே 
நாள் ஒரு தோளினில் 
மாலையை மாற்றிடும் 
ஆண் கூட பெண் வாழ்வதா
அதை நானும் பண்பென்பதா
இது ஞாயமா?????????????????

ஒரு நாள்  எனது சொந்த வேலை காரணமாக  தெரிந்த வக்கீலை பார்க்க சென்று இருந்தேன்……. நான் உள்ளே நுழைந்த போது ஒரு நடுத்தரவயது பெண்மணி என்னை கடந்து சென்றார். எனக்கோ அவரது முகம் எங்கோ பார்த்த நினைவாகவே இருந்தது. பின்னர் எனது வேலைகளை முடித்துவிட்டு நான் எழவும் அப்போது வக்கீலுக்கு ஒரு அலைபேசி அழைப்பு வர எடுத்து காதில் வைத்தவர் சொல்லு சிவகாமி என கேட்டதும் எனது  மூலையில் ஒரு மின்னல் தோன்றி மறைந்தது. சிவகாமி மிஸ் எங்கள் ஊரின் அரசு பள்ளி ஆசிரியர்…..நல்லாசிரியர் விருது வாங்கி இருப்பதாக தற்போது செய்திதாளில் படித்த நியாபகம்……

உடனே நான் மேடம் இப்போ போனவங்க  சிவகாமி டீச்சர் தான என கேட்கவும்

அவரோ ஆமாம் என தலையாட்ட

அவங்க உங்க உறவுகாரங்களா,இல்லை தோழியா என மீண்டும் கேட்க

இல்லை ஒரு கேஷ் விஷயமா வந்திட்டு போறாங்க என்றார்.

அப்படியா என்ன கேஸ் என கேட்கவும்

அவர் சொல்ல தயங்க

நானோ இல்லை மேடம் இவங்க எங்க ஊர்ல கொஞ்ச நாள் வேலை பார்த்தாங்க …எனக்கு ரொம்ப பிடிக்கும் ..அதான் தெரிஞ்சுக்கலாம்னு என இழுக்கவும்

ம்ம்ம் டிவேர்ஸ் கேஷ் விஷயமா என்றவர் சிறிது நேரம் யோசனைக்கு பின் ம்ம்ம் நீயும் இதை தெரிஞ்சுகிறது நல்லதுதான் என  சொல்ல ஆரம்பித்தார்.. நம்மை போல் நடுத்தர  குடும்பத்தில் கனவுகள் கடலளவு இருக்கும்.நிஜம் கைப்பிடி அளவுதான் இருக்கும்…… ஒரே வருஷத்தில் பணக்காரர் ஆகிவிடவேண்டும்……உலகத்தில் உள்ள சந்தோசம் எல்லாம் சீக்கிரம் அனுபவிக்க வேணும் என்ற ஆசை அதிகம் இருக்கும். அதில் சிவகாமியின் குடும்பமும் ஒன்று.பையன் நன்கு படித்து நல்ல உத்தியோகத்தில் இருக்கிறான் என்றதும்  ஒரு டிகிரி முடித்ததும்  மகளின் திருமணத்தை முடித்து விட்டனர்.

அந்த பையனும் நல்ல குணம் தான். நண்பர்கள் கூட்டம் அதிகம். ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் முடிய அவனது முதல் அஸ்த்திரம் பாய்ந்தது.குழந்தை இப்போது வேண்டாம். அவனுக்கு கீழ் இரண்டு தங்கைகள்  இருப்பதால்  அவர்கள் திருமணம் முடிந்ததும் வைத்து கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறான். இந்த பொண்ணும் அவன் மேல இருந்த நம்பிக்கையில் சரின்னு சொல்லிட்டா . ஆனா அவங்க பிறந்த வீட்ல குழந்தை பற்றிய நச்சரிப்பு வர உடனே நீ மேல படின்னு அவள் கவனத்தை  படிப்பில் திசை திருப்பி விட்டுவிட்டான்.படித்து முடித்ததும் வேலைக்கும் அனுப்பி வைத்திருக்கிறான்.

முதலில் அவள் சம்பளத்தை கேட்காதவன் பின்னர் கொஞ்சம் கடன் இருக்கிறது…உனது சம்பளமும் கிடைத்தால் சீக்கிரம் அடைத்துவிட்டு குழந்தை பெத்துகலாம்னு  சொல்லிருக்கிறான். இவளும் அதற்காக  அதிக வேலை செய்து இரண்டு மடங்கு சம்பாரித்து கடனும் அடைத்து முடித்தாகிவிட்டது. அதற்குள் ஐந்து வருடம் ஓடிவிட்டது.

இந்த பெண்ணிற்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்க வேற ஊருக்கு மாற்றல் ஆனது. அப்போதுதான் பிரச்சனை ஆரம்பித்து இருக்கிறது. நீ முதலில் செல்…நான் பின்பு வருகிறேன் என்று சொல்லி இருக்கிறான். அங்கு சென்றதும் அவள் கருவுற அவனோ  தன்னால் இந்த ஊர்  மற்றும் நண்பர்களை விட்டு வர முடியாது…நான் வாரம் இருமுறை வருகிறேன் என சொல்லி இருக்கிறான்.வேறு வழியில்லாமல் அதற்கும் இந்த பெண் ஒத்துக்கொண்டு இருக்கிறாள்.

அதற்கு பின் இரண்டு குழந்தைகள்….எதற்கும் அவனது உதவி கிடைக்கவில்லை.அவனது வேலை வாரத்திற்கு ஒரு முறை வந்து செல்வது மட்டுமே…..நாட்கள் செல்ல செல்ல வீட்டிற்கு பணம் கொடுப்பது நிறுத்தி அனைத்து செலவுகளும் இந்த பெண்ணின் வருமானத்திலே ஓடிக்கொண்டு இருந்திருக்கிறது.. வீட்டிற்கு வந்தால் குழந்தைகள் மீது மிகவும் அன்பாக பாசமாக நடந்து கொள்வான். இந்த பெண்ணிற்கும் தேவையான உதவிகளை செய்வான். இவை எல்லாம் பேச்சு மற்றும் செயல்களில்   மட்டுமே…மற்றபடி அந்த குடும்பத்திற்கான எந்த பொறுப்புகளையும் அவன் எடுத்துக்கலை….குழந்தை வளர்ப்பு  அவர்களின் படிப்பு எல்லாம் இந்த பெண்ணே  பார்த்து இருக்காங்க……ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களால் முடியாம போக இருவரும் ஒரே இடத்தில் இருக்கலாம் என சொல்ல ஆனால் அவர் மறுத்துவிட்டாராம்.

நான் தனி மனிதனாக சுதந்திரமாக இருந்து பழகிவிட்டேன்…..என்னால உங்களோட சேர்ந்து இருக்க முடியாதுன்னு சொல்லிட்டாராம்.

எனதூஊஊஊஊஉ என நான் அதிர்ந்து அவரை பார்க்க

வக்கிலோ இதுகே இப்டினா இன்னும் இருக்கு என்றவர் அப்போ தான் இந்தா பொண்ணுக்கு  தான் எவ்ளோ பெரிய தவறு செஞ்சு இருக்கோம்னு புரிஞ்சு இருக்கு. நல்ல வருமானம்,மரியாதையான வாழக்கை,அழகான குழந்தைகள் மட்டுமே வாழக்கைனு நினச்சுட்டு இருந்தவங்க அப்போதான் வாழக்கையோட இன்னொரு பகுதி அவருக்கு புரிஞ்சு இருக்கு….ஆனாலும் என்ன பயன்? காலம் கடந்திடுச்சு….

அதற்கு பின்பு விசாரித்ததில் அந்த மனிதர் தான் சம்பாரித்ததை சில பல தவறான செயல்களில் செலவு செய்து ஊதாரித்தனமாக வாழ்ந்து இருக்கிறார் என்பது இவங்களுக்கு தெரிஞ்சிருக்கு. பணம் டெபாசிட் செய்து இருக்கிறேன் என்பது எல்லாம் பொய்….அவனை பொறுத்த வரை ஊருக்கு ஒரு வாழக்கை அவனுக்கு ஒரு வாழக்கை என இரட்டை வாழக்கையை மிக அழகாக திட்டம் போட்டு வாழ்ந்து இருக்கிறான்.

படிச்சு இருந்தும் இப்படி ஒரு முட்டாளா இருந்து இருக்காங்கலே என என் மனதின் ஆதங்கம் வார்த்தையாக வெளிவர

உடனே அவர் நம் பெண்கள் படிப்பை பணம் சம்பாதிக்க மட்டுமே பயன் படுத்துகிறார்களே தவிர தங்களது வாழக்கையை சரியான கோணத்தில் கொண்டு  செல்வதற்கு பயன்படுத்தவது இல்லை……. இந்த பெண்ணிற்கு  தன் சம்பாத்தியம்  இருந்ததால் கணவனின் சம்பாத்தியம் அவருக்கு அவசியம் இல்லாமல் போய் விட்டது. மேலும் குழந்தை வளர்ப்பு என்பது பெண்கள் தங்கள் சம்பந்தப்பட்டது என்றே கருதுகின்றனர். எனவே குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்   கணவனை இரண்டாம்பட்சமாகிறார்…..அதனால் அவர் கணவரின் அலட்சியம் அவருக்கு பெரிதாக படவில்லை என சொல்லி நிறுத்தியவர்

என்ன மேடம் புரியாம பேசறிங்க……கணவன் மேல இருக்க நம்பிக்கையில தான் அவங்க எதிர்த்து பேசாம வாழ்ந்து இருக்காங்க….ஆனா அந்த நம்பிக்கையை அந்தஆளு இப்படி சிதச்சுட்டானே…….நீங்களும் அவங்க  மேல்தான் தப்பு இருக்கிற மாதிரி சொல்றிங்க  என நான் ஆத்திரமாக கேட்கவும்

அவரோ நான் மட்டும் இதை சொல்லலை என சொல்லி நிறுத்த

நானோ ஏன் மேடம் வேற யாரு சொல்றாங்க ….. சில ஆணாதிக்க ஜென்மங்களா என கோபத்தில வார்த்தைகள் நெருப்பாக கொட்ட

அவரோ இல்லை அவங்க குழந்தைகளே சொல்றாங்க என நிதானமாக  சொல்லி நிறுத்தவும்

எனதூஊஊஊஊஊ என மீண்டும் நான் அதிர

ஆமாம் ….குழந்தைகளை பொறுத்தவரை வாரத்திற்கு ஒரு முறை வந்து அன்போடு பேசி பாசத்தோடும் பழகும் அப்பா நல்லவர்…..அம்மா தான் வீண் பிரச்சனை செய்கிறார் அப்டின்னு சொல்றாங்க என்றார்.

என்ன மேடம் இப்படி சொல்றிங்க என்றேன். அடுத்தடுத்து அதிர்ச்சி எனக்கும் ஏற்பட்டது….

அவங்க என்ன படிக்கிறாங்க என நான் கேட்டதும்

பையன் கல்லூரி இறுதி ஆண்டு…..பெண் கல்லூரி பேராசரியர் என்றார்.

நானோ அடகடவுளே என்றவள் அடுத்தது என்ன சொல்வது என தெரியாமல் அவர் முகத்தை பார்க்க

அவரோ காலை நேரத்தில் செடியில் பூத்திருக்கும் மலர்களை விட அதில் இருக்கும் பனித்துளிதான் அழகாக தெரியும். இந்த குழந்தைகளுக்கும் இப்போது அப்பா என்கிற பனித்துளிதான் கண்களுக்கு தெரிகிறார்…..அதை தாங்கி நிற்கும் அம்மா என்ற மலர் அவர்களுக்கு தெரியலை என்றவர் காலம் காலமாக பெண்கள் அறிவுபூர்வமாக சிந்திக்காமல் உணர்வுபூர்வமாக  சிந்தித்து  செயல்பட்டு தங்களது ஆற்றல்களை இழந்துகிட்டுவறாங்க என அவரின் ஆதங்கம் வெளிப்பட .

அவர் சொன்ன அடுத்தடுத்த அதிர்ச்சியில் ஒன்றும் புரியாமல் நின்ற நான் சரி இவ்ளோ நாள் இருந்திட்டு இப்போ எதுக்கு டிவேர்ஸ் கேட்கிறாங்க என நான் முதலில் ஆரம்பித்த வினாவை முடிவாக கேட்க

இப்போ அவருக்கு உடம்பு முடியலையாம். அதனால தன்னோட வந்து இருந்து மனைவி தன்னை கவனிச்சுகனம்னு சொல்றாராம் என அவர் முற்றுபுள்ளி வைக்க

அது எப்படி முடியும் மேடம் ? இவர் வேணும்னா கூப்பிடறதும்…..வேண்டாம்னா தூக்கி எரிய அவங்க என்ன ஜடமா…..மனுஷ பிறவி என நான்  அதை  கேள்விக்குறியாக மாற்ற

அவரோ நீ சொல்வதும்  உண்மைதான்…..ஆனா ஊர் என்ன சொல்லுதுனா அவன் ஆம்பிளை …ஏதோ வயசு கோளாறுல அப்படி செஞ்சுட்டான்…..நமக்கு குடும்ப மானம் தான் முக்கியம். அதனால் உன்னோட வேலையை விட்டுட்டு வந்து இவனை பார் அப்படினு சொல்றாங்களாம்….இப்போ அவனிடம் பணமும் இல்லை…..இவங்க வேலையை விட முடியாதுன்னு சொல்ல அப்போ இவங்களோட நடத்தையை தவறா பேசறாங்கலாம் என்றார்.

அச்சோ இப்போ என்ன மேடம் பண்றது என அதுவரை எகிறிய நானே பெண்ணின் நடத்தை என வந்த பிறகு சற்று பயத்துடன் கேட்க

அதை புரிந்து கொண்ட எனது வக்கீலும் சிரித்துகொண்டே இது தான் பெண்களின் வீக்னெஸ் என சொல்லவும்

எனக்கு பதில் சொல்ல தெரியாமல்  இல்லை மேடம்…..டிவேர்ஸ்க்கு காரணம் வேணும்ல…..வரதட்சணை கொடுமை,இல்லை அடித்து கொடுமை படுத்தவது இல்லை வேறு என்ன காரணம் சொல்றது……..பெற்ற பிள்ளைகள் அப்பாவுக்கு சப்போர்ட்டா இருக்கும்போது இவங்க எப்படி என நான் கேள்வியை மாற்ற

உண்மைதான்மா…. எனக்கும் அந்த சந்தேகம் வந்தது….ஆனா இந்த நேரத்துல அவங்க எடுத்த முடிவு என்னோட எண்ணத்தை தவிடுபொடியாக்கிடுச்சு……..இவ்ளோ நாள் நான் என் குடும்பத்துக்காக வாழ்ந்துவிட்டேன்…..என் மகள் படித்து நல்ல பணியில் இருக்கிறாள்.என்மகனுக்கும் படிக்கும்போதே வேலை கிடைத்துவிட்டது…..இனி திருமணம் அவர்கள் விருப்பம்…..இனி  எனக்கான வாழ்கையை நான் வாழ்கிறேன் அப்டின்னு முடிவு எடுத்து ஒரு ஆதரவற்ற குழந்தைகளின் காப்பகத்தில் நான் என்னை இணைத்துக்கொண்டேன்…… எனக்கான பொறுப்பை நிறைவேற்றிவிட்டேன்… இனி என் வாழ்க்கை என் விருப்பம்….  அதன் முதல் படிதான் இந்த டிவேர்ஸ் கேஸ் அப்டின்னு சொன்னாங்க  என சொல்லி நிறுத்தியவர்

இதை எல்லாம் பேசி  முடிச்சுட்டு கடைசியா அவங்க என்கிட்டே …… மேடம் முன்பு எல்லாம் கோபமாக பேசி சண்டையிட்டு உடலில் காயம் ஏற்படுத்தி  வெளிப்படையாக தான் பெண்களை  துன்புருத்துவார்கள்.இப்போது தான் எல்லாரும் படித்து அறிவாளியாகிவிட்டார்களே  …அதனால் தேனொழுக நாவில் நஞ்சை தடவி பேசி, நம்பிக்கை மோசம் செய்து சைலென்ட் கில்லெர் போல்  மனதளவில் பெண்களை துன்புறுத்தி அதில் சுகம் காண்கின்றனர். பொறுப்புகளில் இருந்து தவறியதை பற்றி கொஞ்சம் கூட கவலைபடாமல் தேவை ஏற்படும்போது  தனக்கு வந்து வேலைகாரியாக இருக்க சொல்லி வற்புறுத்துவதோடு இல்லாம  என்  நடத்தையை பற்றியும் தவறாக புரளிய கிளப்பி விடுகிறானே இவனெல்லாம் என்ன ஒரு ஆண்மகன்…… எந்த சமுதயாதிற்காக என்னுடன்  பொய்யான வாழ்க்கை வாழ்ந்தானோ அந்த சமுதாயம் முன்பு நான் அவனை விட்டு விலகுகிறேன்…..எனக்கு டிவேர்ஸ் வாங்கி கொடுங்கன்னு கேட்டாங்க பாரு என சொல்லி நிறுத்தியவர்

என்னை சில நிமிடங்கள் பார்த்துகொண்டே இருந்தவர் பின்னர் ஒரு பெருமூச்சு  விட்டு ம்ம்ம்ம் ஆனால்  இந்த வார்தைகளை அவர் சொல்லும்போது அவர் முகத்தில் கோபம் இல்லை, ஏமாற்றத்தின் வலி இல்லை, விரக்தி இல்லை ஆனால் பேசிய ஒவ்வொறு வார்த்தையுளும் அவரது மன உறுதி தெரிந்தது.வலிகள் அவரை பக்குவபடுத்தி இருந்தது தெரிந்தது.

…….மறுநாள் கேஸ் பைல் பண்ணிட்டேன்…. இப்போ கேஸ் நடந்துகிட்டு இருக்கு என அவர் முடிக்கவும் அவருக்கு அலைபேசி அழைப்பு வர அவர் எழுந்து சென்றுவிட்டார்.

ஆனால் அவர் சொன்ன விஷியங்கள் சிவகாமி டீச்சரின் முடிவும்  என் மனதில் ஆழ பதிந்து விட்டது.

இது போன்ற விஷியங்களில் அனைவரிடமும் ஒரே கருத்தை எதிர்பார்க்க முடியாது. அவர்களின் மனநிலை சூழ்நிலை பொறுத்தே முடிவுகள் அமையும்….

உலகம் பொருளாதரத்தில் உயர்ந்தாலும் .தொழில்நுட்பங்களில் புரட்சி ஏற்பட்டாலும், எவ்ளோதான் பெண்கள் படித்து சர்வேதேச அளவில் வளர்ச்சி அடைந்தாலும் அவர்களுக்கான கொடுமைகளும்  அதற்கு ஏற்றார் போல் நடந்துகொண்டு தான் இருக்கின்றன……..

இதற்கு முடிவுதான் என்ன ???????????  அப்போது  இந்த வரிகள் தான் என் நினைவிற்கு வந்தது.

அடுக்களை துடைப்பதும் படுக்கையை விரிப்பதும்

அது பெண்ணின் தொழில் இல்லையே!

சரித்திரம் படிக்கவும் தரித்திரம் துடைக்கவும்

வருவதில் பிழை இல்லையே  !

ஒரு தென்றல் புயலாகி வருமே

ஒரு தெய்வம் படி தாண்டி வருமே!!!!!!!!!!!!!!!!

வெகுநாட்களாக இதை பற்றி ஆதங்கம் என் மனதில் தணலாக எரிந்து கொண்டு இருந்தது. அதற்கு எழுத்தில்  வடிவம் கொடுத்து இருக்கிறேன்..

மௌனமாக கொதித்த தணல் இன்று ஜுவாலையாக வெளி வர

அதன் ஒளியின் ஓசை உங்களை அடைந்ததா ??????????

காத்திருக்கிறேன் உங்களின் பதிலுக்காக .…………

காக்கை சிறகினிலே நந்தலாலா !!!!!!———-மௌனத்தின் ஓசை

காக்கை சிறகினிலே நந்தலாலா !!!!!!

இளம்  மாலை பொழுதில் அந்திவானத்தை கருமேகம் சூழ, சிலுசிலுவென்ற காற்றும் சில்லென மேனியை தடவிசெல்ல அதற்கேற்ப  மிதமான சூட்டில் ஒரு காபி  குடிக்க என்  மனம் ஆசைகொண்டது. காபி என்றாலே மாமி போடும் பில்டர் காபி தான் நியாபகம் வரும். சரியான அளவில் டிகாஷன் கலந்து ஆவி பறக்க மாமி கொடுக்கும் பில்டர் காபிக்கு எப்போதும் நான் அடிமை.

வேகமாக கதவை பூட்டிவிட்டு பக்கத்து வீட்டிற்குள்  நுழைந்தேன். மாமி மாமி என  அழைத்துகொண்டே நான்  உள்ளே செல்ல, அங்கு வரவேற்பறையில் டிவியில்  ஆயிரம்  மலர்களே மலருங்கள் என்ற பாடல் ஓடிக்கொண்டு இருக்க மாமியோ  நான் வந்தது கூட தெரியாமல் டிவியில் தன்னை மறந்திருந்தார் .

சிரித்துகொண்டே அவர் அருகில் சென்று அமர்ந்த நான் சூப்பர் பாட்டு மாமி.ஜென்சி வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கும் என சொல்லிகொண்டே அவரை திரும்பி பார்த்தேன்.அவரோ அந்த பாடலை விழி அசைக்காமல் பார்த்துகொண்டு இருந்தார்.  நானே மீண்டும் இந்த  கதாநாயகி ரதி எவ்ளோ அழகு, என்ன கலர், பொறந்தா இப்படி பிறக்கணும் மாமி என சொல்ல அவரது விழிகள் சட்டேன  என் விழியை சந்தித்து மீண்டும் பாடளுக்கு செல்ல அந்த வினாடி சந்திப்பு என் மனதிற்குள் ஒரு  அதிர்வை  ஏற்படுத்தியது.

நான் இந்த அடுக்கு மாடி குடியிருப்புக்கு வந்து ஆறு மாதம் ஆகிறது. வந்த முதல்நாளே தானக வந்து அறிமுகபடுத்திகொண்டு உனக்கு என்ன உதவி வேணும்னாலும் கேளுடி பொண்ணே நான் பக்கத்து வீட்ல தான்  இருக்கேன் என தாய்மையோடு சொன்னவர். மாமி,மாமா இருவரும் அரசாங்க உத்தியோகத்தில் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள்…பிள்ளைகள் திருமணம் முடிந்து செட்டில் ஆகிவிட இப்போது மாமவும் மாமியும் மட்டும்தான்.அவர் முகம் சோர்ந்து நான் ஒருபோதும் கண்டதில்லை. மாநிறமாக இருந்தாலும் கலையான முகம். எப்போதும் ஒரு கம்பீரத்துடன் அதே நேரத்தில்  உற்சாகத்துடன் சுற்றிக்கொண்டு இருப்பார். வீட்டிலும் அவர் அதிர்ந்து பேசி கேட்டதில்லை.மாமா மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறார் என்பது அவரது பேச்சினில்  நன்கு தெரியும். சிறந்த தம்பதியருக்கு உதாரணம் இவர்கள் தான் என்ற நானே என்னவரிடம் அடிகடி சொல்லுவேன்.

மாமியின் விழிகளில் தெரிந்தது அந்த உணர்வு என்ன? வினாடிதான் என்றாலும் விழிகள் சொன்ன உணர்வோ என் மனதில் ஒரு விதையை விதைத்து சென்றது.

அந்த பாடல் முடிந்தும் சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருக்க நானே மாமியின் கைகளை மெதுவாக பிடித்தேன். என்ன மாமி என்ன ஆச்சு? என கேட்க அவரோ திரும்பி என் முகத்தை பார்த்தவர் கண்களில் கண்ணீர் வரவில்லை என்றாலும் அவரின் மனதின் வலி கண்களில் நன்கு  தெரிந்தது. என் கைகளில் மீது தன் கையை வைத்து அழுத்தியவர் வெள்ளையாக இருந்தாலே போதும்  அவர்கள் அழகு தானே என்றார்.

சில வினாடிகள் விழித்த நான்  பின்பு புரிந்துகொண்டேன். அவர் கண்களை ஆழமாக பார்த்துகொண்டே நான் உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை மாமி என்றேன். அவரோ உண்மைதானே சொன்னேன். சில உண்மைகள் கேட்கும்போது கசப்பாக தான் இருக்கும். ஆனால் அது தான் நிதர்சனம் என்றார்.

இப்போது உங்களுக்கு ஏன் இது பற்றிய ஆராய்ச்சி என்றேன் நான். ஏனெனில் என் மனதிற்குள்ளும் இது போன்ற  கேள்விகள் அடிகடி ஓடும். . வெள்ளைகாரனை நாட்டை விட்டு துரத்திய நம்மால் வெள்ளை நிறம் தான் உயர்ந்தது என்ற எண்ணத்தை மனதை விட்டு துரத்த முடியவில்லயே என்ற ஆதங்கம் எப்போதும் உண்டு. அதே எண்ணபோக்கில் ஒருவரை கண்டதும் என் வினாவிற்கு விடை தேட முயற்சித்தேன்.

சில மணித்துளிகள் அமைதியாக இருந்தவர் நிறத்தால் ரொம்பவும் பாதிக்க பட்டேண்டி. எங்கள் குடும்பத்தில் நான் மட்டும் நிறம் குறைவு. இதனால் ஏற்பட்ட வேதனைகள் நெஞ்சில் வடுக்கலாக பதிந்து விட்டன என சொல்லும்போதே அவர் குரலின் கமறல் அவர் வேதனையை எனக்கு உணர்த்தியது. நான் எதுவும் பேசாமல் அவரயே பார்த்து கொண்டு இருந்தேன். எல்லா விதத்திலும் முன்னனியில் இருந்தாலும் நிறத்தினால் பின்னுக்கு தள்ளப்பட்டேன்.கருவேர்பில்லை இல்லாமல் சமைக்க முடியாது.ஆனால் சாப்பிடும்போது அது இலையின் ஓரத்தில் தான் ஒதுக்கி வைப்பார்கள்.அது போல் தான் நான். வடுக்கள் கல்வெட்டாக பதிந்துவிட்டது எனபது அவரது பேச்சில் எனக்கு புரிந்தது.

நானோ என்ன சொல்வது என தெரியாமல்  நிறத்தில்  குறைவைத்தாலும் நிறைவான வாழக்கையை ஆண்டவர் உங்களுக்கு கொடுத்து இருக்கிறார் இல்லையா என சமாதனம் சொல்ல

அவரோ  ஒரு வறண்ட புன்னகையை சிந்த   அது  ஏமாற்றமா ? இல்லை விரக்தியா? என புரிந்து கொள்ள முடியாமல் அவரை பார்த்தேன்.

ஏன் மாமி மாமா ஏதாவது உங்களை  என வார்த்தைகளை முடிக்காமல் நான் நிறுத்த

அவரோ  குனிந்து தன் கைகளை பார்த்து கொண்டு இருந்தவர்  சட்டேன்று அது இப்போ வேண்டாம்டி என சொல்லிகொண்டே எழ எனக்கோ அவரை வற்புறுத்த மனம் இல்லைமல்  அவராக சொல்லட்டும் என்று  பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தேன். சில நேரங்களில் மௌனமும் பிரச்சனைக்கு தீர்வாக அமையும் அல்லவா ?

பின்னர் எனக்கு பிடித்த காப்பிய போட்டுகொண்டு வந்து எனக்கும் கொடுத்துவிட்டு தானும் பருகியபடி  என அருகில் அமர்ந்தவர் பெண்கள் மனது இருக்கே என்ன தான் திடமாக இருந்தாலும் பாசத்துக்கும் அன்புக்கும் ஏங்கிர மனசுடி. வெளியே ஆணுக்கு நிகர்னு நம்ம சொல்லிகிட்டாலும் வீட்டுக்குள்  தான் செய்த சமையலை இல்லை வேலையை  தன் அப்பாவோ அல்லது தனது  புருசனோ நல்லா இருக்குனு சொன்னா போதும் நீ எத்தன கோடி  கொடுத்தாலும் அவங்களுக்கு வேண்டாம்.அந்த வார்த்தை மட்டும் போதும்னு சொல்வாங்க. அதாண்டி பொண்ணோட மனசு.

ஏற்கனவே நான் கருப்பா இருக்கேனு எனக்குள்ளே ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்தது என் திருமணத்தின் போது அது காணமா போச்சு.எனக்கு சமமமான ஒருவர் என்னை விரும்பி திருமணம் செய்துக்க சம்மதிச்சாருனு நினைக்கும்போதே  ஒரே சந்தோசம் என சொல்லி நிறுத்தியவர் அம்மா அப்பா பார்த்த மாப்பிள்ளை என்பதால் அதிகம் அவரிடம் பேசலை நான். திருமணம் முடிந்து ஒரு நாள் அவரிடம் சாதரணமாக பேசிக்கொண்டு இருக்கும்போது  எப்படிங்க நிறம் குறைவா இருக்க என்னை நீங்க திருமணம் செய்ய ஒத்துகிடிங்க அப்டின்னு கேட்டேன். அவரோ என்ன பண்றது ..நானும் நல்ல வெள்ளையா  சினிமா நடிகை ரதி மாதிரி ஒரு பொண்ணு வேணும்தான் பார்த்தேன். ஒன்னும் கிடைக்கலை…..வீட்ல வேற வயசு ஆகுதுனு ஒரே நச்சரிப்பு.அதான் வேற வழி இல்லாம உன்னை கட்ட வேண்டியதா போச்சு அப்டினார். அவர் பாவம் எதார்த்தமா தான் சொன்னார் ஆனா என சொல்லிவிட்டு மாமி என் முகத்தை பார்க்க என் கண்களில் முட்டி நின்ற கண்ணீரை அடைக்க நான் மிகவும் சிரமபட்டேன். இங்கும் நான் கருவேப்பிள்ளை  தாண்டி என அவர் சிரித்துகொன்டே சொல்ல என் இதயத்தில் சுருகென்று ஒரு வலி.

என் மனதை படித்தவர் போல் வேதாந்தமும் சித்தாந்தமும் உயிரும் உணர்வும் உள்ள மனசுக்கு புரியாதுடி. சில விஷியங்கள் அர்த்தமற்றது என்றாலும் மனசு அதற்காக எங்கும். என் மனசு ஏங்கியதும் அதற்குதான்  என்றவர் அப்போது கடிகாரம் மணி ஏழு என்று சொல்ல அச்சோ உங்க மாமா வந்திடுவார்…நான் இன்னும் சமைக்கவே இல்ல……அவர்க்கு பிடிச்ச குழிபணியாரம்  செய்யலாம்னு இருந்தேன் என்றபடி வேகமாக சமயலறைக்குள் சென்றார். நானும் அங்கிருந்து கிளம்பினேன்.

மனதிற்குள் ஆயிரம் வேதனை இருந்தாலும் தன் கணவர் குழந்தை என்ற வந்துவிட்டால் அங்கு பெண் என்கிற தனிப்பட்ட மனுசி  மறைந்து பெண்மை உயிர்பெறுகிறது. தாய்மை மேலோங்குகிறது.

மாமியின் மனதில் மௌனமாக புதைந்திருந்த எண்ணங்கள்  சில நிமிடங்கள் உயிர் பெற்ற போது  அதில் இருந்து எழும் ஓசை…….. ……..!