தீக்குள் விரலை வைத்தால்!

 

 

தீக்குள் விரலை வைத்தால்!

தேடல் க்கான பட முடிவு

 

 

தீக்குள் விரலை வைத்தால்!

 

கடலளவு வாழ்க்கையில் நமது துன்பங்கள் கடுகளவு தான். இதை உணர்ந்து தெளிந்தால் வாழும் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தெரிந்த நண்பர் ஒருவர்  எனது அலுவலகத்திற்கு வந்திருந்தார்.. மனைவியை இழந்து சிறிது நாட்களுக்கு முன்பு  தான் மறு திருமணம் செய்தார் . அதிகம் பேசமாட்டார். கோபம் வராது. நல்ல மனிதர்.

இந்த பக்கம் ஒரு வேலை..அப்படியே உங்களையும், சாரையும் பார்த்திட்டு போலாம்னு வந்தேன் என எப்போதாவது அலுவலகம் வந்து போவார். அன்றும் அப்படிதான் போல என நினைத்து “என்ன புது மாப்பிள்ளை சார் அதுக்குள்ள வேலைக்கு வந்திட்டிங்க” என சிரித்து கொண்டே கேட்டேன்.

அவரோ பதில் சொல்லாமல் லேசாக புன்னகைத்தார்.

எனக்கும் வேலை இல்லாதததால் அவரிடம் கொஞ்சம் மொக்கை போடலாம் என்று “அப்புறம் சார் கல்யாண வாழ்க்கை எப்படி போய்கிட்டு இருக்கு” என கேட்க

அதற்கும் மீண்டும் ஒரு புன்னகை மட்டுமே பதில்.

எனது மேசையில் இருந்த பேப்பர் வெயிட்டை கைகளில் திருவியபடியே அமைதியாக அமர்ந்திருந்தார்.

குறைவாக  பேசினாலும் முகம் பார்த்து தெளிவாக பேசக்கூடிய நபர் அவர். ஏனோ வந்ததில் இருந்தே அவர் தலை குனிந்து யோசனையிலே இருப்பது போல தோன

“என்னாச்சு சார் …உடம்பு சரியில்லையா ….டீ வாங்கிட்டு வர சொல்லட்டுமா” என கேட்டேன்.

“அதெல்லாம் வேண்டாம் மேடம். எனகென்ன நான் நல்லாத்தான் இருக்கேன்” என சொல்லும்போதே அவர் வார்த்தையில் ஒரு சலிப்பு தெரிந்தது. …

என் மனதில் சிறு நெருடல் தோன்ற  அமைதியாக என் வேலை தொடர்ந்தேன். சில வினாடிகள் இந்த அமைதி தொடர்ந்தது.

மனதில் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் வெளிவர அதிக  வார்த்தை பிரயோகம் தேவையில்லை. சில மணித்துளி மௌனம் போதும். அதுவே  கரைகளை உடைத்து கடலலையென பொங்கி வரும். அது தான் அப்போதும் நடந்தது.

“இந்த காலத்தில தப்பு செஞ்சாதான் நல்லவன்னு சொல்றாங்க” என அவர் திடீரன பேச ஆரம்பிக்க

எழுதி கொண்டிருந்தவள்  நிமிர்ந்து புரியாமல் அவரை பார்த்தேன்.

“மேடம் இந்த உலகம் இருக்கே முன்ன போனா கடிக்கும்…பின்ன போனா உதைக்கும்” என சம்பந்தம் இல்லாமல் அவர் பேசவும்

“என்னாச்சு சார்….கல்யாணம் முடிஞ்சதும் தத்துவம் எல்லாம் பின்றீங்க….. செம ட்ரைனிங் போல” என நான் கேலியாக கேட்கவும்

அவரின் முகம் சுருங்கி போனது. என் பேச்சு அவர் மனதை காயபடுத்திருக்கிறது  என எனக்கு புரிய

சார்  ….”எதா இருந்தாலும் இதுவும் கடந்து போகும்னு  நினைச்சுக்குங்க …எல்லாம் சரியாகிடும் என்றேன்”.

இதுவரை வந்த  துன்பத்தை எல்லாம் இப்படிதான் நினைச்சு கடந்து வந்தேன். ஆனா இப்போ தவறு செய்பவன் நானாகி போனது தான்  பிரச்சனையே என்றார்.

பெரும்பாலும் ஒருவன் தவறு செய்கிறேன் என புலம்பும்போது  அவனாக பார்த்து அதை சொன்னாலொழிய அதை கேட்பதில் எனக்கு எப்போதும்  உடன்பாடு  கிடையாது.

“விடுங்க சார் ….ஐந்து விரல்களும் ஒன்றாகவா இருக்கு…நம்மளும் எப்பவும் ஒரே மாதிரி இருக்க முடியாதுல….எல்லாம் கால போக்கில மாறிடும் சார் என்றவள் உங்க பிஸினஸ் எல்லாம் எப்படி இருக்கு?” என பேச்சை மாற்றினேன்.

அவரோ ஒரு சில வினாடிகள் என்னையே பார்த்தவர் “மேடம் என்னை உங்களுக்கு ஐந்து வருடமாக  தெரியும்.

எனது முதல் மனைவி இறந்து  என்னோட அம்மாவும் இல்லாம என் குழந்தைய வச்சுகிட்டு நான் எவ்ளோ போராடினேன்னும் உங்களுக்கு தெரியும்” என்றவர்  பேச்சை  நிறுத்தி விட்டு என் முகத்தை பார்த்தார்.

நான் எதுவும் பேசவில்லை. அவர் சொல்வதை கேட்பது போன்ற முகபாவனையில் அமர்ந்திருந்தேன்.

பின்னர் அவரே “அதனால் தான் ஒரு பெண்குழந்தை இருக்கும் பெண்ணாக பார்த்து மறுமணம்  செய்தேன். நானும் எல்லாம் யோசித்து  தான்  முடிவும் எடுத்தேன். ஆனாலும் எங்கோ தப்பு நடந்திருக்கிறது என சொல்லும்போதே அவர் குரலில் ஒரு இயலாமை தெரிந்தது..

எனது மகன் மீது எனக்கு பாசம்  அதிகம். அதே நேரத்தில் என்னை நம்பி வந்த அந்த பெண்ணையும் நான் பார்க்க வேண்டும் அல்லவா? என்னை கணவனாக ஏற்று கொண்ட அவளால் என் மகனை தன் மகனாக ஏற்று கொள்ள முடியவில்லை. என் மகனின் மனநிலையும் அது தான் என்றவர் ஆனால் அவளின் குழந்தையை நான் என் மகளாக தான் பார்க்கிறேன் என சொல்லி நிறுத்தியவர் மேடம் நான் என்ன சொல்லவரேன்னு உங்களுக்கு புரிகிறதா? என கேட்டார்.

நானோ “சார் இதற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்” என கேட்க

“நீங்க பதில் சொல்ல வேண்டாம் மேடம். ஆனா என் மேல் ஏதாவது தவறு இருக்கிறாதாணு மட்டும் சொல்லுங்க…. அப்படி இருந்தா கண்டிப்பா நான் திருத்திக்கிறேன்” என அவர் சொல்லவும் அவர் மனதளவில் எந்த அளவு நொந்து போய் இருக்கிறார் என்பது எனக்கு புரிந்தது. பின்னர் நடந்த நிகழ்வுகளை எல்லாம் சொன்னார்.

அதாவது அந்த சிறுவனும் அந்த பெண்ணை மனதளவில் தாயாக  ஏற்று கொள்ள வில்லை. அதனால் எது வேண்டும் என்றாலும் தந்தையிடமே அடைக்கலமாகிறான். அது அந்த பெண்ணிற்கு பிடிக்கவில்லை போல ….அது என்ன நான் இருக்கும்போது அவன் ஏன் உங்களிடம் சொல்கிறான்? என சண்டையிடுகிறாராம். இவரும் மகனிடம் பொறுமையாக எடுத்து சொல்லி இருக்கிறார். அவனும் சொல்வதற்கு எல்லாம் தலை ஆட்டிவிட்டு மீண்டும் இவரிடம் வருகிறானாம். இதனால் அந்த பெண்மணி அவனிடம் கொஞ்சம் கடுமையான வார்த்தை பிரயோகம் செய்கிறாராம். அவரின் பெண்ணிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாராம். இதை பார்த்து எனக்கு கோபம் வருகிறது. இனியாவது என் வாழ்வில நன்மை வரும் என திருமணம் செய்து  எனது நிம்மதியே போய் விட்டது. ஏதோ தவறு செய்து விட்டது போல தோன்றுகிறது  என்றவர்

சிறிது நிறுத்தி போதாதற்கு சொந்தகாரர்கள் எல்லாம் நான் ஏதோ பொண்டாட்டிதாசன் என்பது போல் என் மகனை நானே வெறுப்பது போல் எல்லாம் பேசுகின்றனர்…..மேடம் நீங்களே சொல்லுங்க இப்போது எனக்கு இருக்கும் ஒரே சொந்தம் அவள் மட்டும் தான். அவளை காப்பதும் எனது கடமை தானே….என்றவர் அடுத்து எதுவும் பேசாமல் என் முகத்தை பார்த்தவர்

 

பின்னர் என்ன நினைத்தாரோ மேடம் இன்னொன்னு சொல்றேன். என் மனைவி இறந்த பிறகு வீட்டிற்கு போனாலே ஒரு வெறுமை தான். அக்கா, தங்கை , உறவினர் எல்லாரும் இருந்தாலும் உரிமையாக சாப்பிட வாங்க என கூப்பிட யாரும் இல்லை. ரொம்ப கஷ்டபட்டுட்டேன்…. நன்றாக சாப்பிடவும், சந்தோஷமாக இருக்கவும் தானே இப்படி ஓடி ஓடி சம்பாதிக்கிறோம். என்னதான் சம்பாத்தியம்,  தைரியம், அந்தஸ்த்து  எல்லாம் இருந்தாலும் ஒரு பெண் இல்லாமல் அவை பூர்த்தி அடையாதுன்னு அனுபவத்தில் புரிஞ்சுகிட்டேன். ஆனா மத்தவங்க எல்லாம் அதை வேற கண்ணோட்டத்தில பார்க்கிறாங்க…. என்னால முடியலை மேடம்….என அவர் புலம்பவும்

 

அவரின் குழப்பமான அந்த மனநிலை எனக்கு நன்கு புரிந்தது. மேலும் எல்லா உணர்வுகளையும் எல்லாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாது. அவர் சொல்ல நினைத்து சொல்ல முடியாமல் தவிக்கும் தவிப்பை அவர் முகமே காட்டி கொடுத்தது.

 

பெண்களை பொறுத்தவரை திருமணம் முடிந்து விட்டால் தன் கணவன் தனக்கு மட்டுமே என்ற உரிமையை யாருக்கும் விட்டு தரமாட்டார்கள். அவர்களை  பொறுத்தவரை கணவனுக்கு பிறகுதான் அவள் குழந்தைகளே வருவார்கள். பிறந்ததில் இருந்து தந்தையின் அரவணைப்பில் வளரும் அந்த குழந்தைக்கு அவரை தவிர வேறு யாரிடமும் ஒட்டுதல் வருவது மிகவும் சிரமம். இரண்டுமே நியாமானது தான்.

 

ஆனால் இது நிரந்திரம் அல்ல …..கண்டிப்பாக மாறும் …….ஆனால் அதற்குள் நடுவில் இருப்பவர்கள் குழப்பி மேலும் அந்த குடும்பத்தில் சிக்கலை ஏற்படுத்தாமல் இருந்தால் மிகவும் நல்லது.

 

ஆதனால் “விடுங்க சார்  கொஞ்ச நாளில் இது எல்லாம் மாறிவிடும்” என்றேன் நான்.

மீண்டும் அவரிடம் அதே புன்னகையே பதிலாக வந்தது. அவர் கிளம்பி சென்று விட்டார்.

 

அவர் எதிர்பார்த்த பதில் என்னிடம் கிடைத்ததா இல்லையா எனக்கு தெரியாது. சில நேரங்களில் தீர்வை  தேடாமல் நம்மை ஆசுவாசபடுத்திகொள்ள  தனது மனகுமறலை இது போல் கொட்டி விடுவதும் நல்லது  தான்.

 

உண்மைதானே தோழமைகளே ………..

வீழ்வேன் என்று நினைத்தாயோ !!!!!—– மௌனத்தின் ஓசை

வீழ்வேன் என்று நினைத்தாயோ !!!!!!!

பூ மாலை ஓர் தோளில் தான்
போட நினைத்தாள் பெண்
போட்டாலும் பூமாலைக்கோர்
பொருளும் இல்லையே 
நாள் ஒரு தோளினில் 
மாலையை மாற்றிடும் 
ஆண் கூட பெண் வாழ்வதா
அதை நானும் பண்பென்பதா
இது ஞாயமா?????????????????

ஒரு நாள்  எனது சொந்த வேலை காரணமாக  தெரிந்த வக்கீலை பார்க்க சென்று இருந்தேன்……. நான் உள்ளே நுழைந்த போது ஒரு நடுத்தரவயது பெண்மணி என்னை கடந்து சென்றார். எனக்கோ அவரது முகம் எங்கோ பார்த்த நினைவாகவே இருந்தது. பின்னர் எனது வேலைகளை முடித்துவிட்டு நான் எழவும் அப்போது வக்கீலுக்கு ஒரு அலைபேசி அழைப்பு வர எடுத்து காதில் வைத்தவர் சொல்லு சிவகாமி என கேட்டதும் எனது  மூலையில் ஒரு மின்னல் தோன்றி மறைந்தது. சிவகாமி மிஸ் எங்கள் ஊரின் அரசு பள்ளி ஆசிரியர்…..நல்லாசிரியர் விருது வாங்கி இருப்பதாக தற்போது செய்திதாளில் படித்த நியாபகம்……

உடனே நான் மேடம் இப்போ போனவங்க  சிவகாமி டீச்சர் தான என கேட்கவும்

அவரோ ஆமாம் என தலையாட்ட

அவங்க உங்க உறவுகாரங்களா,இல்லை தோழியா என மீண்டும் கேட்க

இல்லை ஒரு கேஷ் விஷயமா வந்திட்டு போறாங்க என்றார்.

அப்படியா என்ன கேஸ் என கேட்கவும்

அவர் சொல்ல தயங்க

நானோ இல்லை மேடம் இவங்க எங்க ஊர்ல கொஞ்ச நாள் வேலை பார்த்தாங்க …எனக்கு ரொம்ப பிடிக்கும் ..அதான் தெரிஞ்சுக்கலாம்னு என இழுக்கவும்

ம்ம்ம் டிவேர்ஸ் கேஷ் விஷயமா என்றவர் சிறிது நேரம் யோசனைக்கு பின் ம்ம்ம் நீயும் இதை தெரிஞ்சுகிறது நல்லதுதான் என  சொல்ல ஆரம்பித்தார்.. நம்மை போல் நடுத்தர  குடும்பத்தில் கனவுகள் கடலளவு இருக்கும்.நிஜம் கைப்பிடி அளவுதான் இருக்கும்…… ஒரே வருஷத்தில் பணக்காரர் ஆகிவிடவேண்டும்……உலகத்தில் உள்ள சந்தோசம் எல்லாம் சீக்கிரம் அனுபவிக்க வேணும் என்ற ஆசை அதிகம் இருக்கும். அதில் சிவகாமியின் குடும்பமும் ஒன்று.பையன் நன்கு படித்து நல்ல உத்தியோகத்தில் இருக்கிறான் என்றதும்  ஒரு டிகிரி முடித்ததும்  மகளின் திருமணத்தை முடித்து விட்டனர்.

அந்த பையனும் நல்ல குணம் தான். நண்பர்கள் கூட்டம் அதிகம். ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் முடிய அவனது முதல் அஸ்த்திரம் பாய்ந்தது.குழந்தை இப்போது வேண்டாம். அவனுக்கு கீழ் இரண்டு தங்கைகள்  இருப்பதால்  அவர்கள் திருமணம் முடிந்ததும் வைத்து கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறான். இந்த பொண்ணும் அவன் மேல இருந்த நம்பிக்கையில் சரின்னு சொல்லிட்டா . ஆனா அவங்க பிறந்த வீட்ல குழந்தை பற்றிய நச்சரிப்பு வர உடனே நீ மேல படின்னு அவள் கவனத்தை  படிப்பில் திசை திருப்பி விட்டுவிட்டான்.படித்து முடித்ததும் வேலைக்கும் அனுப்பி வைத்திருக்கிறான்.

முதலில் அவள் சம்பளத்தை கேட்காதவன் பின்னர் கொஞ்சம் கடன் இருக்கிறது…உனது சம்பளமும் கிடைத்தால் சீக்கிரம் அடைத்துவிட்டு குழந்தை பெத்துகலாம்னு  சொல்லிருக்கிறான். இவளும் அதற்காக  அதிக வேலை செய்து இரண்டு மடங்கு சம்பாரித்து கடனும் அடைத்து முடித்தாகிவிட்டது. அதற்குள் ஐந்து வருடம் ஓடிவிட்டது.

இந்த பெண்ணிற்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்க வேற ஊருக்கு மாற்றல் ஆனது. அப்போதுதான் பிரச்சனை ஆரம்பித்து இருக்கிறது. நீ முதலில் செல்…நான் பின்பு வருகிறேன் என்று சொல்லி இருக்கிறான். அங்கு சென்றதும் அவள் கருவுற அவனோ  தன்னால் இந்த ஊர்  மற்றும் நண்பர்களை விட்டு வர முடியாது…நான் வாரம் இருமுறை வருகிறேன் என சொல்லி இருக்கிறான்.வேறு வழியில்லாமல் அதற்கும் இந்த பெண் ஒத்துக்கொண்டு இருக்கிறாள்.

அதற்கு பின் இரண்டு குழந்தைகள்….எதற்கும் அவனது உதவி கிடைக்கவில்லை.அவனது வேலை வாரத்திற்கு ஒரு முறை வந்து செல்வது மட்டுமே…..நாட்கள் செல்ல செல்ல வீட்டிற்கு பணம் கொடுப்பது நிறுத்தி அனைத்து செலவுகளும் இந்த பெண்ணின் வருமானத்திலே ஓடிக்கொண்டு இருந்திருக்கிறது.. வீட்டிற்கு வந்தால் குழந்தைகள் மீது மிகவும் அன்பாக பாசமாக நடந்து கொள்வான். இந்த பெண்ணிற்கும் தேவையான உதவிகளை செய்வான். இவை எல்லாம் பேச்சு மற்றும் செயல்களில்   மட்டுமே…மற்றபடி அந்த குடும்பத்திற்கான எந்த பொறுப்புகளையும் அவன் எடுத்துக்கலை….குழந்தை வளர்ப்பு  அவர்களின் படிப்பு எல்லாம் இந்த பெண்ணே  பார்த்து இருக்காங்க……ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களால் முடியாம போக இருவரும் ஒரே இடத்தில் இருக்கலாம் என சொல்ல ஆனால் அவர் மறுத்துவிட்டாராம்.

நான் தனி மனிதனாக சுதந்திரமாக இருந்து பழகிவிட்டேன்…..என்னால உங்களோட சேர்ந்து இருக்க முடியாதுன்னு சொல்லிட்டாராம்.

எனதூஊஊஊஊஉ என நான் அதிர்ந்து அவரை பார்க்க

வக்கிலோ இதுகே இப்டினா இன்னும் இருக்கு என்றவர் அப்போ தான் இந்தா பொண்ணுக்கு  தான் எவ்ளோ பெரிய தவறு செஞ்சு இருக்கோம்னு புரிஞ்சு இருக்கு. நல்ல வருமானம்,மரியாதையான வாழக்கை,அழகான குழந்தைகள் மட்டுமே வாழக்கைனு நினச்சுட்டு இருந்தவங்க அப்போதான் வாழக்கையோட இன்னொரு பகுதி அவருக்கு புரிஞ்சு இருக்கு….ஆனாலும் என்ன பயன்? காலம் கடந்திடுச்சு….

அதற்கு பின்பு விசாரித்ததில் அந்த மனிதர் தான் சம்பாரித்ததை சில பல தவறான செயல்களில் செலவு செய்து ஊதாரித்தனமாக வாழ்ந்து இருக்கிறார் என்பது இவங்களுக்கு தெரிஞ்சிருக்கு. பணம் டெபாசிட் செய்து இருக்கிறேன் என்பது எல்லாம் பொய்….அவனை பொறுத்த வரை ஊருக்கு ஒரு வாழக்கை அவனுக்கு ஒரு வாழக்கை என இரட்டை வாழக்கையை மிக அழகாக திட்டம் போட்டு வாழ்ந்து இருக்கிறான்.

படிச்சு இருந்தும் இப்படி ஒரு முட்டாளா இருந்து இருக்காங்கலே என என் மனதின் ஆதங்கம் வார்த்தையாக வெளிவர

உடனே அவர் நம் பெண்கள் படிப்பை பணம் சம்பாதிக்க மட்டுமே பயன் படுத்துகிறார்களே தவிர தங்களது வாழக்கையை சரியான கோணத்தில் கொண்டு  செல்வதற்கு பயன்படுத்தவது இல்லை……. இந்த பெண்ணிற்கு  தன் சம்பாத்தியம்  இருந்ததால் கணவனின் சம்பாத்தியம் அவருக்கு அவசியம் இல்லாமல் போய் விட்டது. மேலும் குழந்தை வளர்ப்பு என்பது பெண்கள் தங்கள் சம்பந்தப்பட்டது என்றே கருதுகின்றனர். எனவே குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்   கணவனை இரண்டாம்பட்சமாகிறார்…..அதனால் அவர் கணவரின் அலட்சியம் அவருக்கு பெரிதாக படவில்லை என சொல்லி நிறுத்தியவர்

என்ன மேடம் புரியாம பேசறிங்க……கணவன் மேல இருக்க நம்பிக்கையில தான் அவங்க எதிர்த்து பேசாம வாழ்ந்து இருக்காங்க….ஆனா அந்த நம்பிக்கையை அந்தஆளு இப்படி சிதச்சுட்டானே…….நீங்களும் அவங்க  மேல்தான் தப்பு இருக்கிற மாதிரி சொல்றிங்க  என நான் ஆத்திரமாக கேட்கவும்

அவரோ நான் மட்டும் இதை சொல்லலை என சொல்லி நிறுத்த

நானோ ஏன் மேடம் வேற யாரு சொல்றாங்க ….. சில ஆணாதிக்க ஜென்மங்களா என கோபத்தில வார்த்தைகள் நெருப்பாக கொட்ட

அவரோ இல்லை அவங்க குழந்தைகளே சொல்றாங்க என நிதானமாக  சொல்லி நிறுத்தவும்

எனதூஊஊஊஊஊ என மீண்டும் நான் அதிர

ஆமாம் ….குழந்தைகளை பொறுத்தவரை வாரத்திற்கு ஒரு முறை வந்து அன்போடு பேசி பாசத்தோடும் பழகும் அப்பா நல்லவர்…..அம்மா தான் வீண் பிரச்சனை செய்கிறார் அப்டின்னு சொல்றாங்க என்றார்.

என்ன மேடம் இப்படி சொல்றிங்க என்றேன். அடுத்தடுத்து அதிர்ச்சி எனக்கும் ஏற்பட்டது….

அவங்க என்ன படிக்கிறாங்க என நான் கேட்டதும்

பையன் கல்லூரி இறுதி ஆண்டு…..பெண் கல்லூரி பேராசரியர் என்றார்.

நானோ அடகடவுளே என்றவள் அடுத்தது என்ன சொல்வது என தெரியாமல் அவர் முகத்தை பார்க்க

அவரோ காலை நேரத்தில் செடியில் பூத்திருக்கும் மலர்களை விட அதில் இருக்கும் பனித்துளிதான் அழகாக தெரியும். இந்த குழந்தைகளுக்கும் இப்போது அப்பா என்கிற பனித்துளிதான் கண்களுக்கு தெரிகிறார்…..அதை தாங்கி நிற்கும் அம்மா என்ற மலர் அவர்களுக்கு தெரியலை என்றவர் காலம் காலமாக பெண்கள் அறிவுபூர்வமாக சிந்திக்காமல் உணர்வுபூர்வமாக  சிந்தித்து  செயல்பட்டு தங்களது ஆற்றல்களை இழந்துகிட்டுவறாங்க என அவரின் ஆதங்கம் வெளிப்பட .

அவர் சொன்ன அடுத்தடுத்த அதிர்ச்சியில் ஒன்றும் புரியாமல் நின்ற நான் சரி இவ்ளோ நாள் இருந்திட்டு இப்போ எதுக்கு டிவேர்ஸ் கேட்கிறாங்க என நான் முதலில் ஆரம்பித்த வினாவை முடிவாக கேட்க

இப்போ அவருக்கு உடம்பு முடியலையாம். அதனால தன்னோட வந்து இருந்து மனைவி தன்னை கவனிச்சுகனம்னு சொல்றாராம் என அவர் முற்றுபுள்ளி வைக்க

அது எப்படி முடியும் மேடம் ? இவர் வேணும்னா கூப்பிடறதும்…..வேண்டாம்னா தூக்கி எரிய அவங்க என்ன ஜடமா…..மனுஷ பிறவி என நான்  அதை  கேள்விக்குறியாக மாற்ற

அவரோ நீ சொல்வதும்  உண்மைதான்…..ஆனா ஊர் என்ன சொல்லுதுனா அவன் ஆம்பிளை …ஏதோ வயசு கோளாறுல அப்படி செஞ்சுட்டான்…..நமக்கு குடும்ப மானம் தான் முக்கியம். அதனால் உன்னோட வேலையை விட்டுட்டு வந்து இவனை பார் அப்படினு சொல்றாங்களாம்….இப்போ அவனிடம் பணமும் இல்லை…..இவங்க வேலையை விட முடியாதுன்னு சொல்ல அப்போ இவங்களோட நடத்தையை தவறா பேசறாங்கலாம் என்றார்.

அச்சோ இப்போ என்ன மேடம் பண்றது என அதுவரை எகிறிய நானே பெண்ணின் நடத்தை என வந்த பிறகு சற்று பயத்துடன் கேட்க

அதை புரிந்து கொண்ட எனது வக்கீலும் சிரித்துகொண்டே இது தான் பெண்களின் வீக்னெஸ் என சொல்லவும்

எனக்கு பதில் சொல்ல தெரியாமல்  இல்லை மேடம்…..டிவேர்ஸ்க்கு காரணம் வேணும்ல…..வரதட்சணை கொடுமை,இல்லை அடித்து கொடுமை படுத்தவது இல்லை வேறு என்ன காரணம் சொல்றது……..பெற்ற பிள்ளைகள் அப்பாவுக்கு சப்போர்ட்டா இருக்கும்போது இவங்க எப்படி என நான் கேள்வியை மாற்ற

உண்மைதான்மா…. எனக்கும் அந்த சந்தேகம் வந்தது….ஆனா இந்த நேரத்துல அவங்க எடுத்த முடிவு என்னோட எண்ணத்தை தவிடுபொடியாக்கிடுச்சு……..இவ்ளோ நாள் நான் என் குடும்பத்துக்காக வாழ்ந்துவிட்டேன்…..என் மகள் படித்து நல்ல பணியில் இருக்கிறாள்.என்மகனுக்கும் படிக்கும்போதே வேலை கிடைத்துவிட்டது…..இனி திருமணம் அவர்கள் விருப்பம்…..இனி  எனக்கான வாழ்கையை நான் வாழ்கிறேன் அப்டின்னு முடிவு எடுத்து ஒரு ஆதரவற்ற குழந்தைகளின் காப்பகத்தில் நான் என்னை இணைத்துக்கொண்டேன்…… எனக்கான பொறுப்பை நிறைவேற்றிவிட்டேன்… இனி என் வாழ்க்கை என் விருப்பம்….  அதன் முதல் படிதான் இந்த டிவேர்ஸ் கேஸ் அப்டின்னு சொன்னாங்க  என சொல்லி நிறுத்தியவர்

இதை எல்லாம் பேசி  முடிச்சுட்டு கடைசியா அவங்க என்கிட்டே …… மேடம் முன்பு எல்லாம் கோபமாக பேசி சண்டையிட்டு உடலில் காயம் ஏற்படுத்தி  வெளிப்படையாக தான் பெண்களை  துன்புருத்துவார்கள்.இப்போது தான் எல்லாரும் படித்து அறிவாளியாகிவிட்டார்களே  …அதனால் தேனொழுக நாவில் நஞ்சை தடவி பேசி, நம்பிக்கை மோசம் செய்து சைலென்ட் கில்லெர் போல்  மனதளவில் பெண்களை துன்புறுத்தி அதில் சுகம் காண்கின்றனர். பொறுப்புகளில் இருந்து தவறியதை பற்றி கொஞ்சம் கூட கவலைபடாமல் தேவை ஏற்படும்போது  தனக்கு வந்து வேலைகாரியாக இருக்க சொல்லி வற்புறுத்துவதோடு இல்லாம  என்  நடத்தையை பற்றியும் தவறாக புரளிய கிளப்பி விடுகிறானே இவனெல்லாம் என்ன ஒரு ஆண்மகன்…… எந்த சமுதயாதிற்காக என்னுடன்  பொய்யான வாழ்க்கை வாழ்ந்தானோ அந்த சமுதாயம் முன்பு நான் அவனை விட்டு விலகுகிறேன்…..எனக்கு டிவேர்ஸ் வாங்கி கொடுங்கன்னு கேட்டாங்க பாரு என சொல்லி நிறுத்தியவர்

என்னை சில நிமிடங்கள் பார்த்துகொண்டே இருந்தவர் பின்னர் ஒரு பெருமூச்சு  விட்டு ம்ம்ம்ம் ஆனால்  இந்த வார்தைகளை அவர் சொல்லும்போது அவர் முகத்தில் கோபம் இல்லை, ஏமாற்றத்தின் வலி இல்லை, விரக்தி இல்லை ஆனால் பேசிய ஒவ்வொறு வார்த்தையுளும் அவரது மன உறுதி தெரிந்தது.வலிகள் அவரை பக்குவபடுத்தி இருந்தது தெரிந்தது.

…….மறுநாள் கேஸ் பைல் பண்ணிட்டேன்…. இப்போ கேஸ் நடந்துகிட்டு இருக்கு என அவர் முடிக்கவும் அவருக்கு அலைபேசி அழைப்பு வர அவர் எழுந்து சென்றுவிட்டார்.

ஆனால் அவர் சொன்ன விஷியங்கள் சிவகாமி டீச்சரின் முடிவும்  என் மனதில் ஆழ பதிந்து விட்டது.

இது போன்ற விஷியங்களில் அனைவரிடமும் ஒரே கருத்தை எதிர்பார்க்க முடியாது. அவர்களின் மனநிலை சூழ்நிலை பொறுத்தே முடிவுகள் அமையும்….

உலகம் பொருளாதரத்தில் உயர்ந்தாலும் .தொழில்நுட்பங்களில் புரட்சி ஏற்பட்டாலும், எவ்ளோதான் பெண்கள் படித்து சர்வேதேச அளவில் வளர்ச்சி அடைந்தாலும் அவர்களுக்கான கொடுமைகளும்  அதற்கு ஏற்றார் போல் நடந்துகொண்டு தான் இருக்கின்றன……..

இதற்கு முடிவுதான் என்ன ???????????  அப்போது  இந்த வரிகள் தான் என் நினைவிற்கு வந்தது.

அடுக்களை துடைப்பதும் படுக்கையை விரிப்பதும்

அது பெண்ணின் தொழில் இல்லையே!

சரித்திரம் படிக்கவும் தரித்திரம் துடைக்கவும்

வருவதில் பிழை இல்லையே  !

ஒரு தென்றல் புயலாகி வருமே

ஒரு தெய்வம் படி தாண்டி வருமே!!!!!!!!!!!!!!!!

வெகுநாட்களாக இதை பற்றி ஆதங்கம் என் மனதில் தணலாக எரிந்து கொண்டு இருந்தது. அதற்கு எழுத்தில்  வடிவம் கொடுத்து இருக்கிறேன்..

மௌனமாக கொதித்த தணல் இன்று ஜுவாலையாக வெளி வர

அதன் ஒளியின் ஓசை உங்களை அடைந்ததா ??????????

காத்திருக்கிறேன் உங்களின் பதிலுக்காக .…………

ரௌத்திரம் பழகு ——–மௌனத்தின் ஓசை

ரௌத்திரம் பழகு ——–மௌனத்தின் ஓசை

           ரௌத்திரம் பழகு !

  தொழில்முறையில்  பல பெண்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் அப்படி நான் சந்தித்த பெண்களில் ஒருத்தி தான் வேணி.

தொழில் சம்பந்தமாக அவர்கள் வீட்டிற்கு நான் ஒருமுறை சென்று இருக்கும்போது  வேணி அவள் அம்மாவிடம் சினிமாவிற்கு செல்ல அனுமதி கேட்டு சண்டைபோட்டு கொண்டு இருந்தாள்.  என்னை பார்த்ததும் புதுமுகம் என அவள் சற்று தயங்க அவள் அம்மா  என்னிடம் நன்றாக பேசியதும் பின்னர் அவளும் சகஜமானாள்.

பின்னர் அவளது அம்மா என்னிடம் இந்த காலத்து பிள்ளைகளை எப்படி தனியா வெளியே அனுப்றது ..பயமா இருக்கு என புலம்பவும் நானே இப்போ இருக்கிற பிள்ளைகள் விவரமானவர்கள்…அவர்களுக்கு உலகம் தெரியும் நீங்க அனுப்புங்க என  சொன்னதும் நீ படிச்ச பொண்ணு… சொன்னா சரியா தான் இருக்கும் என்றவர்  சரி அவங்க சொல்றாங்க…அதனால் அனுப்றேன் என  சொல்லி அனுப்பிவைக்க  நான் சந்தோசம் தானே என்றபடி  வேணியின் முகத்தை பார்க்க ஆனால் அவள் முகத்திலே ஒரு அடிபட்ட வலி தெரிந்தது. போகவேண்டும் என அடம்பிடித்தபோது இருந்த அந்த வேகம் அனுமதி கிடைத்த பின்பு அவள் முகத்தில் இல்லை.

சிலவருடங்கள் அவள் வீட்டிற்கு சென்று வந்து கொண்டு இருந்ததில் வேணியிடம் நல்ல நட்பு ஏற்பட்டது.படிப்பு முடிக்கும் நேரத்தில் நான் வேறு இடத்திற்கு இடம்பெயர அவர்களுடனான நட்பு அப்படியே விட்டுப்போனது.சிலமாதங்களில் வேணிக்கு திருமணம் என்ற தகவல் மட்டும் எனக்கு வந்தது.

ஒருமுறை உறவினர் ஒருவரை சந்திக்க நான் சென்று இருக்க அங்கு வேணியின் அம்மாவை பார்த்தேன்.  நல விசாரிப்புகளுக்கு பிறகு வேணியை பற்றி பேச்சு வந்தது. வேணி எப்படி இருக்கிறாள்…அவளுக்கு எத்தனை குழந்தைகள்  என நான் விசாரிக்க…. அவர் கண்களில் இருந்து கண்ணீர்…….. அவ எங்க வாழ்ந்தா….போன மூணு மாசத்துல திரும்ப பொழைக்காம வந்திட்டா……கேட்டா காரணமும் சொல்ல மாட்டேன்கிறா என சொல்லவும்  சாலையில் நின்று இருந்ததால் அதற்கு மேல் பேசமுடியாமல் அவர்களின்  முகவரி வாங்கி கொண்டு நான் வந்துவிட்டேன். ஏனோ இரவு முழுவதும் எனக்கு  தூக்கம் இல்லை.

மறுநாள் அவர்கள் வீட்டிற்கு சென்றேன். என்னை பார்த்ததும் உள்ளே வாம்மா என  அவள் அம்மா அப்பா இருவரும்  அழைக்க அப்போது எதிரில் இருக்கும் அறைகதவு வேகமாக மூடும்  சத்தம் கேட்டது.

நான் அவர்களின் முகத்தை பார்க்க

அவர்களோ தரையை பார்க்க சில நொடிகள் மௌனத்தில் கரைந்தன.

பின்பு வேணிகிட்ட நான் பேசணும் என்றேன்.

அவள் அன்னையோ அவ இப்போ யார்கூடவும் சரியா பேசறது இல்லை…..வீட்டுக்கு யாராவது வந்தா ரூம்குள்ள போய் கதவை சாத்திகிறா என்றார்கள்.

ஏனோ என்னிடம் பேசுவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

முதலில் கதவை தட்டியதும் திறக்க மறுத்தவள் பின்னர் என் பெயரை சொல்லியதும் சிறிது நேரத்திற்கு பிறகு கதவு திறந்தது.

உள்ளே நுழைந்ததும் கதவை தாளிட்டவல் ஏதும் பேசாமல் சென்று படுத்துகொண்டாள்.

சுற்றிலும் பார்த்தேன்…மனதின் உச்சகட்ட வெறுப்பு அவளை சுற்றிலும் இருந்தது..ஒரே குப்பையாக அந்த அறை இருக்க அதில் அவள் வரைந்த ஓவியத்தை எடுத்தேன்.

நீ வரைந்ததா வேணி…ரொம்ப நல்லா இருக்கு என நான் ஆரம்பித்ததும் அதுவரை கண்களை மூடி இருந்தவள் வேகமாக திறந்து உங்களுக்கு பிடிச்சிருக்கா என்றாள்.

அழகா இருக்கு…இதுக்கு பிரேம் போட்டு மாட்டிவை என நான் சொல்லவும்

வேண்டாமக்கா …வேண்டாம்…….நான் காட்சி பொருளாக இருந்ததே போதும்….என்னோட படைப்பும் காட்சிபொருளாக மாறவேண்டாம் என அவள் வேகமாக மறுக்க

அவள் அருகில் அமர்ந்து அவள் கைகளை பிடித்தேன். அதில் தெரிந்த நடுக்கம் அவளது மனதை துல்லியமாக காட்டியது.

தீர்வு இல்லாத பிரச்சனை எதுவும் இல்லை என்றேன்.

தீர்வை தேட நான் முயற்சிக்களை என்றாள் அவள்.

மனசு குப்பைகளை சேகரிச்சு வைக்கும் குப்பை தொட்டி இல்லை வேணி……உன்னால் முடிந்தால் தீர்வை தேடு…இல்லை மனசில இருக்கிறத கொட்டிவிடு என்றேன்.

சிறிது நேரம் என் கைகளையே பிடித்து கொண்டு இருந்தவள் பெண்ணா பிறக்கிறது ரொம்ப பாவம்க்கா என்றாள்.

நிமிர்ந்து என் முகத்தை பார்த்தவள் என்னிடம் இருந்து பதில் வராமல் போக

அவர் மேல எந்த தப்பும் இல்லை……என்னால்தான் அவரோட குடும்பம் நடத்த முடியலை என்றாள்.

உனக்கு என்ன பிரச்சனை……எதா இருந்தாலும் உன்னை பெத்தவங்க இருக்காங்க…அவங்ககிட்ட சொல்லாம்ல என்றேன்.

பிரச்சனையே அவங்க தானே என்றாள்.

நான் அதிர்ச்சியாக பார்க்க

என் அம்மா அப்பா அதிகம் படிக்காதவங்க….. உலக அனுபவமும் அதிகம் கிடையாது.அதனால எந்த ஒரு விஷியமும் பக்கத்துல இருகிறவங்களை கேட்டு தான் செய்வாங்க. சின்ன வயசில  அது தவறா தோணலை.ஆனால் நான் பெரிய பொண் ஆனதுக்கு அப்புறமும் அவங்க அப்படி பண்றது எனக்கு பிடிக்கலை. காலேஜ்க்கு போறதுக்கு,எக்ஸ்ட்ரா கிளாஸ் போறதுக்கு எல்லாமே பக்கத்து வீட்ல  இருக்க அந்த ஆண்ட்டி அங்கிள் சரின்னு சொன்னதான் எங்க வீட்ல விடுவாங்க.மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்திச்சுக்கா என சொல்லி நிறுத்தியவள்

சில வினாடிகள் என் முகத்தை உற்று பார்க்க நானே என்ன சொல்வது என தெரியமல் அவள் தலையை மட்டும் வருடிகொடுத்தேன். சில நேரங்களில் மனதில் நினைப்பதை  வார்த்தையால் வடிவம் கொடுக்க முடியாது. என் நிலைமையும்  அதே தான்.

பின்பு அவளே தொடர்ந்தாள்.முதல்ல சாதாரணமா போய்கிட்டு இருந்த இந்த விஷயம் வந்து வந்து என சொல்லும்போதே அவள் கைகள் நடுங்க உடலை தன்னுள் அவள்  சுருக்க முயற்சிக்க

விட்டுடு வேணி…சொல்லவேண்டாம் என்றேன்.

நான் சொல்லிமுடித்ததும் என் மீது விழுந்து  கதறி அழுதவள் அந்த அங்கிள் மோசமானவன்க்கா…..என்னை என்னை கண்ட இடத்தில என வார்த்தைகள் சொல்லமுடியாமல் அவள் துடிக்க என் மனமோ அனல் போல கொதித்தது.

இந்த மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள். பெண்கள்  என்றாலே சதைபின்டங்கள் தானா…….மகள் போல் இருப்பவளிடம் எப்படி சில்மிஷம் செய்ய தோனுகிறது…….கனிவை காட்ட வேண்டிய வயதில் காமபார்வையை வீசும் இது போன்ற கயவர்களை உயிரோடு தீயிட்டு கொளுத்த வேண்டும்.

அவள் என்னுள் ஒண்ட நானோ அவளை தோளோடு சேர்த்து அனைத்ததும்  அவளது நடுக்கம் சற்று  குறைய முதல்ல எனக்கு தெரியலைக்கா….எனக்கு அந்த விஷியதுல எந்த விபரமும் தெரியலை. ……யோகா சொல்லி தரேன்னு தொடக்கூடாத இடத்தில எல்லாம் தொடுவான். எனக்கும் அது தவறுன்னு புரியலை.ஒருமுறை இதபத்தி என் தோழிகிட்ட சொல்லும்போது  அவதான் சொன்னாள். அதுக்கப்றம் நான் சுதாரிக்கவும் அவன் என்னை மிரட்ட ஆரம்பிச்சுட்டான். அப்பா அம்மாகிட்ட சொல்றதுக்கும் பயம். அவன் செஞ்சத வெளியே சொன்னா நீ ஒரு பையன்கூட பேசறேன்னு உங்கவீட்ல சொல்லுவேன் சொன்னான்.. எங்க வீட்லயும் அவன்  சொன்னா அப்படியே கேட்பாங்க…..நான் என்ன பண்ணட்டும் என அவள் சொல்லும்போதே அவள் எந்த அளவு துடித்து இருந்திருப்பாள் என்ற எனக்கு புரிந்தது.

என் விரல்களை இறுக பற்றியவள் நரக வேதனை அனுபவிச்சேன்க்கா ….ஒருவழியா வேலைக்கு போக ஆரம்பிச்சதும் அவன்கிட்ட இருந்து எனக்கு விடுதலை கிடச்சுது.ஆனா ..ஆனா என நிறுத்தியவள்

இது என் கல்யாணத்தில பெரிய பிரச்சனை ஆகும்னு நான் நினைக்கலை என்றவள் திருமணமாகி கணவன் வீட்டிற்கு செல்ல அங்கு கூட்டு குடும்பம் என்பதால் ஆண்கள் பலர் இருக்க இவளால் அவர்களோடு ஒன்றி போக முடியவில்லை. யாரை பார்த்தாலும் அந்த ஆள் நியாபகம் தான் வருது.இதுநாள எங்க இரண்டுபேருக்குள்ளும்  சண்டை….இதை எப்படிக்கா நான் வெளியே சொல்லுவேன்…அதான் அவராது இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கட்டும்னு நான் வெளியே வந்திட்டேன் என்றாள்.

பாதகம் செய்பவரை கண்டால் நாம்  பயம்   கொள்ளலாகாது பாப்பா…மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா என பாரதி அப்போதே பாடினான். ஆனால் இன்று எத்தனை பேரால் அது முடிகிறது..

வேணியின் நிலையில் இன்று பலபெண்கள்…….இதில் யார்குற்றம்…….  எனது அப்பா அம்மா என்னை புரிந்து கொள்வார்கள்….. நான் சொல்வதை கேட்பார்கள் என்ற நம்பிக்கையை பெண்ணின் மனதில் பதியவைக்காத பெற்றோரின் குற்றமா????????

, இல்லை தான் தான் படிக்கவில்லை…படித்தவர்கள் நல்லவர்கள்…தவறு செய்யமாட்டார்கள் என மனதில் ஊறிப்போன நம்பிக்கையில் பழகியவர்களை உறவாக நினைத்து   அவர்களின் ஆலேசனை கேட்டு தன் பிள்ளையை அது போல் வழிநடத்த  அவர்கள் ஆசைப்பட்டது அவ்வளவ்வு  பெரிய  தவறா??????

ரௌத்திரம் பழகு   என பாரதி சொன்னதை புரிந்து கொள்ளாமல் கொடுமைகளை சகித்து கொண்டு  என்னை பெற்றவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்…ஊரார் தவறாக பேசுவார்கள்…என்னோட சுததிந்திரம் பாதிக்கபடும் என நினைத்து தனது வேதனைகளை நெஞ்சுக்குள்ளே  புதைத்து அதனால் தனது வாழ்க்கையை சூனியமாக்கிய வேணியின் குற்றமா?????????

இப்படி கேள்விகள் பல மனதில் எழுந்தாலும் அதற்க்கான தீர்வை தேடும் நேரம் இதுவல்ல என நினைத்து ஒரு நல்ல மனநல ஆலோசகரின் முகவரியை கொடுத்துவிட்டு அமைதியாக திரும்பினேன். விரைவில் வேணி குணமடைந்து அவள் கணவனுடன் சேர்ந்து வாழ்வாள் என்ற நம்பிக்கையில்……….

வேணி போன்ற பல பெண்கள் மனதில் இது போன்ற ரணங்கள் மௌனமாக புதைந்து கிடைக்கிறது.

அவற்றிற்கு ஓசை கொடுத்தால் …………………………………!