உணர்ந்திடு பெண்ணே !!

தொடர்புடைய படம்

  உணர்ந்திடு பெண்ணே !!

வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தாலும் சரி , வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தாலும் சரி இப்பொழுது எல்லாம் ஸ்ட்ரெஸ் என்ற மன அழுத்தத்திற்க்கு மிகவும் ஆளாகுகிறார்கள். இது தொடர்பாக ஒரு   கட்டுரை படிக்க நேரிட்டது . அதில் உள்ள தகவல்களை உங்களிடம் பகிர்கிறேன்.

முன்பு எல்லாம் மன அழுத்தம், மன உளைச்சல் ,மன சோர்வு என்பதெல்லாம் பெரிய பெரிய வேலைகளில் இருப்பவர்களுக்கும் சமுதாய பணிகளில் இருப்பவர்களுக்கும் மட்டுமே இருந்து வந்தது. ஆனால் இப்போது வீட்டில் இருப்பவர்களும் அதிலும் குறிப்பாக பெண்கள் நூற்றுக்கு என்பது சதவீதம் பேர் இந்த ஸ்ட்ரெஸ் என்ற மன அழுத்தத்தால் பாதிக்க படுகின்றனர்.

இப்பொழுதெல்லாம் முப்பது வயதிற்கு மேல் இருக்கும் பெண்களுக்கு இந்த ஸ்ட்ரெஸ் பெரும் பிரச்சனையாக இருக்கிறது.

மன அழுத்தம் வர காரணம்:

  1. நீங்கள் விரும்பியது நடக்காமல் போவது
  2. நடந்த ஒருவிஷியத்தை ஏற்றுகொள்ள முடியாமல் கஷ்டபடுவது.
  3. தகுதிக்கு மேல் ஆசைப்பட்டு அதை அடைய முடியாமல் போவது.

சரி இவற்றை எப்படி சரி செய்வது:

ஆண்/ பெண் இருவரில் யாருக்கு மன அழுத்தம் அதிகம் என பார்த்தால் நிச்சியம் பெண்ணுக்குத்தான் . ஏனெனில் ஆண் மூளையின் சுரபிகள் லாஜிக்காக சிந்திப்பவை. அதனால் அவன் நினைத்ததை அடைந்து விடுகிறான். பெண் மூளையின் சுரபிகள் எமோஷனலாகவும் பீலிங்க்ஸாகவும் சுரப்பவை. பெண்களின் வாழ்க்கை எப்போதும் குடும்பத்தை சுற்றியே இருக்கும்.அவர்களாலே இதை மாற்ற முடியாது.

ஆண் பெண் இருவருக்குமே பிரச்சனைகளும் மன அழுத்தமும் சமம் தான் என்றாலும் பெண்களின் எதிர்பார்ப்பு சுரபிகள் அவர்களின் குடும்பத்தை தாண்டி அவர்களை போக விடாது.

அதனால் ஒரு விஷியத்துகாக ஏங்குவதோ , அது நடக்க வில்லை என்றால் ஏற்றுகொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பதோ, அதற்காக தன் சக்தியையும் மீறி ட்ரை பண்ணிகொண்டிருப்பதை கொஞ்சம் விட்டு விடுங்கள்.

அதாவது ஒன்று அடையுங்கள் அல்லது விட்டு விடுங்கள். முடியாது என்று தெரிந்த பின்னும் அதை பிடித்து தொங்கி கொண்டிருப்பது தான் மன அழுத்தம் ஆரம்பிக்கும் இடம்.

உதாரணத்திற்கு உங்களின் கேள்வி என் கணவர் வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பு வைத்திருக்கிறார் என்றால் அதை எப்படி என்னால் ஏற்றுகொள்ள முடியும்?

கண்டிப்பாக ஏற்றுகொள்ள முடியாது தான் . அதற்கு என்ன செய்வது. முதலில் அவரை திருத்த முயற்சி செய்ய வேண்டும். அனைத்து முயற்சிகளும் செய்து உங்கள் கணவர் மாற வில்லை என்றால் அதை ஏற்று கொள்ளும் மனப்பக்குவத்தை நீங்கள் வளர்த்து கொள்ள வேண்டும். ஏற்றுகொள்வதை விட ஏற்று கொள்ளாமல் இருக்கும்போது வரும் மன அழுத்தம் மிக வேதனை நிறைந்தது பெண்களே..

ஏற்று கொண்டால் கணவர் இல்லாவிட்டாலும் வாழ்க்கை இருக்கிறது. ஏற்றுகொள்ளாமல் இருந்தால் கணவனும் இல்லை ,வாழ்க்கையும் இல்லை.

பெண் என்பவள் குடும்பத்தின் ஆணி வேர்.ஆண்கள் இந்த விஷியத்தில் சுத்த வேஸ்ட் .ஆண்கள் பிரச்சனைகளை கண்டால் இடிந்து விடுவார்கள்.ஆனால் பெண்கள் அப்படி அல்ல ..பிரச்சனைகளை அழகாக தூக்கி பிடிக்கும் வல்லமை படைத்தவர்கள். அதில் இருந்து மிக சாதூரியாமாக நீந்தி வந்து விடுவார்கள்.

பெண்மூலையின் சுரபிகள் குடும்பத்தை தாண்டி வேறு எதையும் யோசிக்காது.அதனால் குடும்பத்தின் பிரச்சனைகளை வெறும் பிரச்சனையாக மட்டுமே பார்த்து சரி செய்து கொள்ளுங்கள்.அந்த பிரச்சனைக்குள் உங்கள் மனதை கொடுத்து கவலையை பரிசாக பெற வேண்டாம்.

விளக்கமாக சொல்கிறேன். யார் ஒருவரும் தன் வாழ்க்கையின் குறிக்கோளில் மற்றொரு மனிதரை முன்னிலைபடுத்தவே கூடாது. அதாவது உங்களது சந்தோஷத்தை அடுத்தவரை கொண்டு நிர்ணயம் செய்யாதீர்கள்.தோழிகளே இதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

உங்களது குறிக்கோளில் இரண்டாவது நபர் இல்லாத பட்சத்தில் நீங்கள் சரியாக வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். நிச்சயம் உங்களுக்கு மன அழுத்தம் வர வாய்ப்பு இல்லை.

உங்கள் குறிக்கோளில் மற்றொரு நபர் இருக்கும் பட்சத்தில் அது உங்களின் சந்தோஷத்தையும் நிம்மதியையும் கெடுக்கும்.

உதாரணமாக என் பையன் முதல் மார்க் வாங்க மாட்டேன்கிறான்.அவன் வாங்கினால் தான் எனக்கு நிம்மதி ..

என் கணவர் உடன் பிறந்தவர்களுக்கு அதிகம் செலவு செய்கிறார். அதை எப்போது நிறுத்துகிறாரோ அப்போது தான் எனக்கு நிம்மதி ..

இந்த விஷியங்களில் எல்லாம் வேறொருவர் சம்பந்தப்பட்டிருப்பதால், ஒருவேளை அவர்கள் உங்கள் எதிர்பார்ப்பின்படி நடக்காமல் போய்விட்டால் அது உங்களுக்கு மனவலியை தரும். அதென்ன என் கணவரும் , என் மகனும் வேறு நபர்களா ? என்ற கேள்வி உங்களுக்கு வரும். கண்டிப்பாக கணவராக இருந்தாலும் , மகன் மகளாக இருந்தாலும் அவர்கள் உங்களுக்கு இரண்டாவது நபர்தான். அதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் கணவருக்காக, குழந்தைகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் மனதை மட்டும் கொடுத்து விடாதீர்கள்.மனதை கொடுக்காமல் உழைப்பை கொடுக்கும்போது உங்கள் மனம் உறுதியாக இருக்கும். எந்த சோர்வும் அண்டாது.

இது தான் நிரந்திர தீர்வு , நிதர்சனமும் கூட!

 

பட்ட விரட்டி —- எனது பார்வையில்

 

 

 

பட்ட விரட்டி
THE KITE RUNNER

ஹாய் பிரிண்ட்ஸ் நான் வந்துவிட்டேன்.

இந்த முறை நான் படித்து சிலிர்த்த ஒரு புத்தகத்தை பற்றிய எனது பார்வையை சொல்ல வந்திருக்கேன்.

கதையின் பெயர் : பட்ட விரட்டி
ஆசிரியர் :காலித் ஹூசைனி
தமிழில் மொழி பெயர்ப்பு : எம் .யூசப் ராஜா

ஏன் இந்த கொலைவெறி…..நீ எழுதின கதையிலேயே கதை இருக்காது. இதுல அடுத்துவங்க எழுதின கதையை பத்தி நீ சொல்ல போறீயா…என்ன கொடுமை சரவணன் இது ?????? அப்டின்னு நீங்க காண்டு ஆகிறது எனக்கு புரியுது .

ஆனா இதுல விஷயம் என்னன்னா இந்த புத்தகத்தை எனக்கு படிக்க சொல்லி கொடுத்த ஒரு தோழி விஜி நீங்க ஒரு ரைட்டர் ..(சரி விடுங்க விடுங்க என்னையும் உலகம் நம்புதுபா)… இந்த மாதிரி புத்தகம் எல்லாம் படிங்க…இன்னும் நீங்க உங்களை டெவலப் பண்ணிக்லாம்னு சொல்லி கொடுத்தாங்க.

எனக்கு இந்த மாதிரி மொழி பெயர்ப்பு புத்தகம் படிக்கிறதில அதிக விருப்பம் இல்லை.ஆனா அவங்க இந்த புத்தகம் கொடுக்கும்போது நீங்க ஒரு ஸ்டோரி ரைட்டர்னு சொன்னாங்க பாரு அதுக்காகவே வாங்கிட்டு வந்தேன்.

அந்த புத்தகமும் ஒருமாசமா ஷெல்ப்ல,சோபா மேல அப்டின்னு அங்கும் இங்கும அல்லாடி ஒருவழியா படிக்கிரதுக்கு எதுவுமே இல்லை அப்டிங்கிற சூழ்நிலையில அந்த புத்தகத்தை எடுத்தேன்.

உண்மையை சொல்லனும்னா நான் இதுவரைக்கும் மொழிபெயர்ப்பு புத்தகம் படிச்சதில்லை.நான் எட்டாவது படிச்ச போது பேச்சு போட்டில ஜெயிச்சதுக்கு பரிசா செம்மணி வளையல் அப்டின்னு ஒரு மொழிபெயர்ப்பு புத்தகம் கொடுத்தாங்க. அது இப்போ வரை பரிசு பொருளுக்கான ஷெல்ப்ல பார்வைக்கு இருக்குது.

அதுனால விருப்பம் இல்லாம எடுத்து முதல் மூன்று பக்கம் படிச்சேன். ஒன்னுமே புரியலை….உடனே ஐம்பதாவது பக்கத்துக்கு போயிட்டேன்.அங்கு கதையின் நாயகர்கள் நட்பை பற்றி ஆசிரியர் சொல்லிய விதம் பிடித்து போக தொடர்ந்து படித்தேன்.ஒரு நாற்பது பக்கம் முடித்திருப்பேன். கதை லேசாக புரிந்தது.அதற்கு மேல் என்னால் தொடரமுடியவில்லை. மீண்டும் முதல் பக்கம் எடுத்து மறுபடியும் ஆரம்பித்தேன். அப்போதில் இருந்து அந்த புத்தகத்தை படித்து முடித்து கீழே வைத்த பின்பும் என்னால் அதில் இருந்து வெளிவரமுடியவில்லை.

கதை ஆப்கானிஸ்தானத்தின் காபூல் நகர்ல இருந்து ஆரம்பிக்குது. சும்மா சொல்லகூடாது காபூல் நகரின் தட்பவெப்பநிலை வசந்தகாலத்தை பற்றிய ஆசிரியரின் வர்ணனன அபாரம்.படிக்கும்போது நாமும் காபூல் நகரில் இருப்பது போலவே இருக்கும்.

கதையின் நாயகர்கள் அமீர் , ஹசன் இரண்டுபேரும் நண்பர்கள். அதாவது அமீரின் தந்தை பெரிய பணக்காரர் …ஹசனின் தந்தை அலி அவர்களின் வேலைகாரர். ஆனால் முதலாளி வேலைக்காரன் பாகுபாடின்றி அமீர் தந்தை அவர்களை ஒரே மாதிரிதான் நடத்துவார். இருவருக்கும் அம்மா இல்லை.

குழந்தையின் வளர்ப்பில் ஒரு தந்தையின் பங்கு ,அந்த சிறுவயது ஏக்கம், தன் தந்தையிடம் பாராட்டு வாங்குவதற்காக அமீர் எடுக்கும் முயற்சிகள் அனைத்துமே மிகவும் அருமையாக சொல்லி இருப்பார் ஆசிரியர்.

அமீரும் ஹசனும் நண்பர்களாக இருந்தாலும் தனக்குரிய எல்லையை அறிந்து வைத்திருந்தான் ஹசன். அந்த இடத்தில் அந்த பாத்திரத்தின் படைப்பு அபாரம்.

அந்த நகரில் பட்டம் விடுதல் ஒரு புகழ் பெற்ற விளையாட்டு.அதில் இரண்டு நண்பர்களும் வல்லவர்கள்.ஒருமுறை அப்படி ஒரு விளையாட்டில் பட்டத்தை தேடி செல்லும்போது எதிரிகளிடம் மாட்டி கொள்கிறான் ஹசன். அந்த எதிரிகள் அவனை அடித்து வன்புணர்ச்சி செய்து விடுகின்றனர். அதை அமீர் பார்துகொண்டிருந்தாலும் அவனின் பயம் அதை தடுக்க முடியாமல் செய்துவிடுகிறது.

அதற்கு பின்பு ஹசனுடன் அவனால் இயல்பாக பழக முடியவில்லை. தான் தவறு செய்து விட்டேனோ…எனக்காக ஹசன் எத்தனை நன்மை செய்திருக்கிறான்…ஆனால் அவனுக்கு துன்பம் வந்த போது தான் பலகீனமற்று நின்றது அவன் மீதே அவனுக்கு வெறுப்பு வந்தது. ஹசன் எப்போதும் போல் பேசினாலும் அவன் ஒதுங்கி செல்ல ஒரு கட்டத்தில் ஹசன் மீது வீண் பலி சுமத்த ஹசனும் அவனது தந்தையும் அந்த வீட்டில் இருந்து வெளியேறிவிடுகின்றனர். இந்த இடத்தில் இரு நண்பர்களின் மன உணர்வுகளை மிக நுணுக்கமாக வெளிபடுத்தி இருப்பார் ஆசிரியர்.

பின்னர் ஆப்கானில் ரஷியா ராணுவம் வர அங்கிருந்து தப்பித்து அகதிகளாக பாகிஸ்தான் சென்று பின் அங்கிருந்து அமெரிக்கா சென்று விடுகின்றனர் அமீரும் அவன் தந்தையும். அங்கு அமீர் படித்து ஒரு எழுத்தாளன் ஆகிறான்.திருமணம் நடக்கிறது. அமீரின் தந்தையும் இறந்து விடுகிறார்.

ஒரு சமயம் தந்தையின் நண்பரை அமீர் சந்திக்கிறான். ஹசன் அமீர் நட்பு பற்றி அவருக்கு தெரியும்.அவர்களின் பிரிவும் அவருக்கு தெரியும். அவர் இறக்கும் தருவாயில் ஹசன் கொடுக்க சொன்னதாக ஒரு கடிதத்தை கொடுக்கிறார். அதை படித்ததும் அதிர்ந்த அமீர் உடனே காபூல் நோக்கி கிளம்புகிறான்.

அந்த சமயத்தின் ரஷியர்களை துரத்திவிட்டு ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சி நடக்கிறது. மக்களை கொடுமைபடுத்தி அராஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கும் வேளையில் உயிரை பணயம் வைத்து அங்கு வருகிறான் அமீர்.

அந்த கடிதத்தில் என்ன இருந்தது ? எதற்காக காபூல் வருகிறான்? அங்கு அவன் என்ன செய்தான்? தாலிபான்களின் அட்டகாசம் என்ன ? இவை எல்லாம் நான் சொல்வதை விட நீங்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

காபூல் நகரின் பருவகாலம், இரு நண்பர்களின் குழந்தை பருவம், நண்பனுக்கு தன்னால் உதவ முடியவில்லயே என்ற குற்ற உணர்ச்சியில் அமீர் மருக, அதை அறிந்தும் தெரியாதது போல் நண்பனிடம் அன்பை செலுத்தும் ஹசன், அதற்கு மரியாதை கொடுக்கும் வகையில் பிற்காலத்தில் நண்பனின் விருப்பத்திற்காக தனது உயிரையும் பணயம் வைக்கும் அமீர், தாலிபான்களின் கொடூரம் இவை எல்லாம் படிக்க படிக்க என்னை சிலிர்க்க வைத்தவை.

நான் இந்த கதைக்கு விமர்சனம் எழுதவில்லை. இந்த கதை என்னை எப்படி பாதித்தது என்பதை மட்டுமே சொல்லி இருக்கேன் நீங்களும் படித்து பார்த்துவிட்டு உங்களது அனுபவத்தை சொல்லுங்கள் .

தமிழில் மிக அழகாக மொழிபெயர்த்து எந்த இடத்திலும் சோர்வடையாமல் கொண்டு சென்று என்னை போன்றவர்களும் இது போன்ற கதையை படிக்க வாய்ப்பு கொடுத்து யூசப் ராஜா அவர்களுக்கு மிக பெரிய நன்றி….

பிரச்சனைகளை விட்டு ஓடாதீர்கள்…படித்ததில் பிடித்தது.


வாழ்க்கையில்நாம் எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலைகளைக்

கையாள்வது எப்படி என்பதை சத்குரு விவரிக்கிறார்.

 

வாழ்கையில் ஏதேனும் பிரச்சினை என்றால் அதை விட்டுத் தூர விலகவே நாம் எத்தனிப்போம். நம்முடன் இருப்பவர்களும் கூட, “பிரச்சினைக்கு தீர்வு தெரியவில்லை என்றால், அதை விட்டுவிடு. நடப்பது நடக்கட்டும் என்று சரணடைந்து விடு” என்றே சொல்கிறார்கள். பிரச்சினையை நீங்கள் விட்டுவிடுவீர்கள்… ஆனால் பிரச்சினை பலநேரங்களில் உங்களை அவ்வளவு சுலபமாக விட்டுவிடாதே! வங்கியில் கடன் வாங்கிவிட்டு, அதைத் திரும்பக் கட்டமுடியாமல் தவிப்பவர்களைப் பார்த்திருப்பீர்கள் தானே? அக்கடனை விட்டு அவர்கள் ஓடநினைத்தாலும், வங்கி அவர்களை விடுவதில்லையே! வாழ்க்கையும் இதுபோலத்தான் – வாழ்வில் நீங்கள் சந்திக்க நேரிடும் சூழ்நிலைகளும் ‘கடன்’ போன்றதுதான். அதற்கான விலையை நீங்கள் கொடுக்கத்தான் வேண்டும் – பணத்தைக் கொண்டு அல்ல, உங்கள் வாழ்வைக் கொண்டு. நீங்கள் புத்திசாலியாக இருந்தால் அதற்கென ஒருவிலை தருவீர்கள், இல்லையேல் அதற்கு வேறுவிலை தர நேரிடும்… எது எப்படியோ… அதற்கான விலையை மட்டும் தந்தே ஆகவேண்டும்.

நமக்கிருக்கும் பிரச்சினைகள் எல்லாம் பிரச்சினையாக இருப்பது, அவற்றை நாம் பிரச்சினையாகப் பார்ப்பதால்தான். நிஜத்தில் பார்த்தால் வாழ்வில் பிரச்சினைகள் என்று எதுவும் கிடையாது… இருப்பது சூழ்நிலைகள் மட்டும்தான். ஆம்… ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான சூழ்நிலை. அவற்றைப் ‘பிரச்சினை’யாகப் பார்த்தால், அவை பிரச்சினையாக மாறிவிடும். ஆனால் அதையே அற்புதமான வாய்ப்பாகப் பார்த்தால், அது அவ்வாறே அற்புதமான வாய்ப்பாக மாறிடும். இப்போது எங்கோ யாருக்கோ கல்யாணம் நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஆனால் அவருக்கோ அதில் சிறிதும் இஷ்டமில்லை. இது அவருக்கு பெரும் பிரச்சினையாக ஆகிறது. இது அவருள் எந்த அளவிற்கு பாதிப்பை உருவாக்கும் உங்களுக்குத் தெரியுமா? இதுவே வேறொருவர் விருப்பத்தோடு கல்யாணம் செய்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்… அவரின் வாழ்வில் அதுவே பொன்னாளாக உருவெடுக்கும். ஒரே சூழ்நிலைதான்… ஆனால் அதை பிரச்சினையாக மாற்றிக் கொள்வதும், அற்புதமாக வைத்துக் கொள்வதும், அதை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள் என்பதைப் பொருத்தே அமைகிறது.

எந்த ஒரு சூழ்நிலையும் வளைக்கமுடியாத, மாற்றமுடியாத ஒன்றல்ல. உங்களுக்குப் பிடிக்காத, அல்லது வேண்டாத சூழ்நிலையில் தற்போது இருக்கிறீர்கள்… அதில் இருக்கவேண்டாம் என்று எண்ணுகிறீர்கள் என்றால், அந்தச் சூழ்நிலையை சற்றே கூர்ந்து கவனியுங்கள். அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் உங்களுக்குத் தென்படும்.உதாரணத்திற்கு, மிகவும் அடைத்து வைத்தாற் போன்று உணர்கிறீர்கள்… கொஞ்சம் காற்று வேண்டும் என்று தோன்றுகிறது என்றால், ஜன்னலைத் திறந்து வையுங்கள். அதுவே போதும். இல்லை… அங்கிருந்து வெளியே செல்லவேண்டும் என்றால், கதவைத் திறந்துகொண்டு வெளியே செல்லுங்கள். இது முழுக்கமுழுக்க உங்கள் தேர்வுதான். ஆனால் இதில் நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும், அதற்கென்று குறிப்பிட்ட பின்விளைவுகள் இருக்கும். அதைச் சந்திக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? என்பதுதான் கேள்வியே.

ஒரு பொருள் பத்து ரூபாய் என்றால், அதை நீங்கள் வாங்க நினைக்கலாம்… ஆனால் அதுவே பதினொன்று ரூபாய் என்றால் அதை நீங்கள் வாங்க மறுக்கலாம். இது முழுக்கமுழுக்க உங்கள் தீர்மானம். அதே போல்தான் வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையும். இது பணம் சார்ந்த சூழ்நிலைகளுக்கு மட்டுமல்ல. வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலைக்குமே ஒரு விலை உண்டு. அந்த விலை ஏற்கக்கூடியதா, இல்லையா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அதை நீங்கள் மட்டும்தான் முடிவுசெய்ய முடியும். வேறொரு கோணத்திலிருந்து பார்த்துவிட்டு, அதைத் தேவையற்ற, வீணான செயலாக நான் கருதலாம்… ஆனால் அதே சூழ்நிலை உங்களுக்குப் பெருமதிப்புள்ளதாக இருக்கலாம். அதனால் இது வேறுயாரோ முடிவு செய்வதல்ல.

அந்த சூழ்நிலைக்குத் தேவையான விலையைக் கொடுக்க உங்களுக்கு விருப்பமா, இல்லையா என்பதை முடிவு செய்யுங்கள். முடிவெடுத்த பின், சந்தோஷமாக அந்த விலையைக் கொடுத்துவிடுங்கள். விருப்பமின்றி அந்த விலையைக் கொடுத்தால், அது கிடைத்தும் நீங்கள் அவதியுறுவீர்கள். ஒரு முடிவை எடுத்தபின் அதில் சரி, தவறு என்று எதுவுமில்லை. ‘நல்ல வாழ்க்கை’ என்றெல்லாம் எதுவுமில்லை. ஆனால் ஏதோ ஒன்றில் முழுமனதோடு உங்களை நீங்கள் ஈடுபடுத்திக் கொண்டால், உங்கள் வாழ்க்கை உங்களுக்கு அற்புதமாகவே இருக்கும். எவ்வளவு சிறிய விஷயமாக இருந்தாலும் அதில் முழுமையாய் நீங்கள் ஈடுபட்டால் உங்கள் அனுபவத்தில் அது அற்புதமாகவே இருக்கும்.வேறொருவருக்கு நீங்கள் செய்வது அர்த்தமற்றதாக இருக்கலாம், முட்டாளத்தனமாகக் கூடத் தோன்றலாம். ஆனால் உங்கள் அனுபவத்தில் அது உயரியதாக இருக்கிறது… அவ்வளவுதான் வேண்டும்.

வாழ்க்கைஎன்பது சூழ்நிலைகளின் கோர்வை. நீங்கள் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில்செல்லும்போது, நீங்கள்எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் உங்களுக்குப் பரிச்சயமற்றதாக இருப்பதற்கான சாத்தியங்கள்மிகஅதிகம். அவற்றை எப்படிக் கையாளவேண்டும் என்று உங்களுக்குத் தெரியாத பட்சத்தில்,அவை உங்களுக்குச் வாலாக அமையலாம்… ஆனால்அவையே பிரச்சினைகள் அல்ல.

உண்மையில் பிரச்சினை என்பது உங்கள் வாழ்வில் ‘புதுப்புது’ சூழ்நிலைகள் இல்லாமற் போவதுதான்.அப்போது வாழ்க்கை தேங்கி நின்றிடும். தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் நீங்கள் இருக்க விரும்பினால், உங்களுக்குப் பரிச்சயமல்லாத,உங்களுக்குக் கையாளத் தெரியாத புதுப்புது சூழ்நிலைகளைஎதிர்கொண்டு கொண்டே இருப்பீர்கள்.

அதனால் உங்கள் வாழ்வில் ‘பிரச்சினை’களை அதிகம் எதிர்கொள்கிறீர்கள்என்றால், உங்கள் வாழ்வை மாபெரும் சாத்தியக்கூறாக நீங்கள்மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.