பட்ட விரட்டி —- எனது பார்வையில்

 

 

 

பட்ட விரட்டி
THE KITE RUNNER

ஹாய் பிரிண்ட்ஸ் நான் வந்துவிட்டேன்.

இந்த முறை நான் படித்து சிலிர்த்த ஒரு புத்தகத்தை பற்றிய எனது பார்வையை சொல்ல வந்திருக்கேன்.

கதையின் பெயர் : பட்ட விரட்டி
ஆசிரியர் :காலித் ஹூசைனி
தமிழில் மொழி பெயர்ப்பு : எம் .யூசப் ராஜா

ஏன் இந்த கொலைவெறி…..நீ எழுதின கதையிலேயே கதை இருக்காது. இதுல அடுத்துவங்க எழுதின கதையை பத்தி நீ சொல்ல போறீயா…என்ன கொடுமை சரவணன் இது ?????? அப்டின்னு நீங்க காண்டு ஆகிறது எனக்கு புரியுது .

ஆனா இதுல விஷயம் என்னன்னா இந்த புத்தகத்தை எனக்கு படிக்க சொல்லி கொடுத்த ஒரு தோழி விஜி நீங்க ஒரு ரைட்டர் ..(சரி விடுங்க விடுங்க என்னையும் உலகம் நம்புதுபா)… இந்த மாதிரி புத்தகம் எல்லாம் படிங்க…இன்னும் நீங்க உங்களை டெவலப் பண்ணிக்லாம்னு சொல்லி கொடுத்தாங்க.

எனக்கு இந்த மாதிரி மொழி பெயர்ப்பு புத்தகம் படிக்கிறதில அதிக விருப்பம் இல்லை.ஆனா அவங்க இந்த புத்தகம் கொடுக்கும்போது நீங்க ஒரு ஸ்டோரி ரைட்டர்னு சொன்னாங்க பாரு அதுக்காகவே வாங்கிட்டு வந்தேன்.

அந்த புத்தகமும் ஒருமாசமா ஷெல்ப்ல,சோபா மேல அப்டின்னு அங்கும் இங்கும அல்லாடி ஒருவழியா படிக்கிரதுக்கு எதுவுமே இல்லை அப்டிங்கிற சூழ்நிலையில அந்த புத்தகத்தை எடுத்தேன்.

உண்மையை சொல்லனும்னா நான் இதுவரைக்கும் மொழிபெயர்ப்பு புத்தகம் படிச்சதில்லை.நான் எட்டாவது படிச்ச போது பேச்சு போட்டில ஜெயிச்சதுக்கு பரிசா செம்மணி வளையல் அப்டின்னு ஒரு மொழிபெயர்ப்பு புத்தகம் கொடுத்தாங்க. அது இப்போ வரை பரிசு பொருளுக்கான ஷெல்ப்ல பார்வைக்கு இருக்குது.

அதுனால விருப்பம் இல்லாம எடுத்து முதல் மூன்று பக்கம் படிச்சேன். ஒன்னுமே புரியலை….உடனே ஐம்பதாவது பக்கத்துக்கு போயிட்டேன்.அங்கு கதையின் நாயகர்கள் நட்பை பற்றி ஆசிரியர் சொல்லிய விதம் பிடித்து போக தொடர்ந்து படித்தேன்.ஒரு நாற்பது பக்கம் முடித்திருப்பேன். கதை லேசாக புரிந்தது.அதற்கு மேல் என்னால் தொடரமுடியவில்லை. மீண்டும் முதல் பக்கம் எடுத்து மறுபடியும் ஆரம்பித்தேன். அப்போதில் இருந்து அந்த புத்தகத்தை படித்து முடித்து கீழே வைத்த பின்பும் என்னால் அதில் இருந்து வெளிவரமுடியவில்லை.

கதை ஆப்கானிஸ்தானத்தின் காபூல் நகர்ல இருந்து ஆரம்பிக்குது. சும்மா சொல்லகூடாது காபூல் நகரின் தட்பவெப்பநிலை வசந்தகாலத்தை பற்றிய ஆசிரியரின் வர்ணனன அபாரம்.படிக்கும்போது நாமும் காபூல் நகரில் இருப்பது போலவே இருக்கும்.

கதையின் நாயகர்கள் அமீர் , ஹசன் இரண்டுபேரும் நண்பர்கள். அதாவது அமீரின் தந்தை பெரிய பணக்காரர் …ஹசனின் தந்தை அலி அவர்களின் வேலைகாரர். ஆனால் முதலாளி வேலைக்காரன் பாகுபாடின்றி அமீர் தந்தை அவர்களை ஒரே மாதிரிதான் நடத்துவார். இருவருக்கும் அம்மா இல்லை.

குழந்தையின் வளர்ப்பில் ஒரு தந்தையின் பங்கு ,அந்த சிறுவயது ஏக்கம், தன் தந்தையிடம் பாராட்டு வாங்குவதற்காக அமீர் எடுக்கும் முயற்சிகள் அனைத்துமே மிகவும் அருமையாக சொல்லி இருப்பார் ஆசிரியர்.

அமீரும் ஹசனும் நண்பர்களாக இருந்தாலும் தனக்குரிய எல்லையை அறிந்து வைத்திருந்தான் ஹசன். அந்த இடத்தில் அந்த பாத்திரத்தின் படைப்பு அபாரம்.

அந்த நகரில் பட்டம் விடுதல் ஒரு புகழ் பெற்ற விளையாட்டு.அதில் இரண்டு நண்பர்களும் வல்லவர்கள்.ஒருமுறை அப்படி ஒரு விளையாட்டில் பட்டத்தை தேடி செல்லும்போது எதிரிகளிடம் மாட்டி கொள்கிறான் ஹசன். அந்த எதிரிகள் அவனை அடித்து வன்புணர்ச்சி செய்து விடுகின்றனர். அதை அமீர் பார்துகொண்டிருந்தாலும் அவனின் பயம் அதை தடுக்க முடியாமல் செய்துவிடுகிறது.

அதற்கு பின்பு ஹசனுடன் அவனால் இயல்பாக பழக முடியவில்லை. தான் தவறு செய்து விட்டேனோ…எனக்காக ஹசன் எத்தனை நன்மை செய்திருக்கிறான்…ஆனால் அவனுக்கு துன்பம் வந்த போது தான் பலகீனமற்று நின்றது அவன் மீதே அவனுக்கு வெறுப்பு வந்தது. ஹசன் எப்போதும் போல் பேசினாலும் அவன் ஒதுங்கி செல்ல ஒரு கட்டத்தில் ஹசன் மீது வீண் பலி சுமத்த ஹசனும் அவனது தந்தையும் அந்த வீட்டில் இருந்து வெளியேறிவிடுகின்றனர். இந்த இடத்தில் இரு நண்பர்களின் மன உணர்வுகளை மிக நுணுக்கமாக வெளிபடுத்தி இருப்பார் ஆசிரியர்.

பின்னர் ஆப்கானில் ரஷியா ராணுவம் வர அங்கிருந்து தப்பித்து அகதிகளாக பாகிஸ்தான் சென்று பின் அங்கிருந்து அமெரிக்கா சென்று விடுகின்றனர் அமீரும் அவன் தந்தையும். அங்கு அமீர் படித்து ஒரு எழுத்தாளன் ஆகிறான்.திருமணம் நடக்கிறது. அமீரின் தந்தையும் இறந்து விடுகிறார்.

ஒரு சமயம் தந்தையின் நண்பரை அமீர் சந்திக்கிறான். ஹசன் அமீர் நட்பு பற்றி அவருக்கு தெரியும்.அவர்களின் பிரிவும் அவருக்கு தெரியும். அவர் இறக்கும் தருவாயில் ஹசன் கொடுக்க சொன்னதாக ஒரு கடிதத்தை கொடுக்கிறார். அதை படித்ததும் அதிர்ந்த அமீர் உடனே காபூல் நோக்கி கிளம்புகிறான்.

அந்த சமயத்தின் ரஷியர்களை துரத்திவிட்டு ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சி நடக்கிறது. மக்களை கொடுமைபடுத்தி அராஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கும் வேளையில் உயிரை பணயம் வைத்து அங்கு வருகிறான் அமீர்.

அந்த கடிதத்தில் என்ன இருந்தது ? எதற்காக காபூல் வருகிறான்? அங்கு அவன் என்ன செய்தான்? தாலிபான்களின் அட்டகாசம் என்ன ? இவை எல்லாம் நான் சொல்வதை விட நீங்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

காபூல் நகரின் பருவகாலம், இரு நண்பர்களின் குழந்தை பருவம், நண்பனுக்கு தன்னால் உதவ முடியவில்லயே என்ற குற்ற உணர்ச்சியில் அமீர் மருக, அதை அறிந்தும் தெரியாதது போல் நண்பனிடம் அன்பை செலுத்தும் ஹசன், அதற்கு மரியாதை கொடுக்கும் வகையில் பிற்காலத்தில் நண்பனின் விருப்பத்திற்காக தனது உயிரையும் பணயம் வைக்கும் அமீர், தாலிபான்களின் கொடூரம் இவை எல்லாம் படிக்க படிக்க என்னை சிலிர்க்க வைத்தவை.

நான் இந்த கதைக்கு விமர்சனம் எழுதவில்லை. இந்த கதை என்னை எப்படி பாதித்தது என்பதை மட்டுமே சொல்லி இருக்கேன் நீங்களும் படித்து பார்த்துவிட்டு உங்களது அனுபவத்தை சொல்லுங்கள் .

தமிழில் மிக அழகாக மொழிபெயர்த்து எந்த இடத்திலும் சோர்வடையாமல் கொண்டு சென்று என்னை போன்றவர்களும் இது போன்ற கதையை படிக்க வாய்ப்பு கொடுத்து யூசப் ராஜா அவர்களுக்கு மிக பெரிய நன்றி….

Leave a comment